''தாய்மாமன் தங்க மோதிரம்'' திட்டத்திற்கு இத்தனை நிபந்தனைகளா? - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆனால் இதற்கான நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

Published : September 1, 2026 at 5:09 PM IST
|Updated : September 4, 2026 at 5:31 PM IST
எஸ்.ரவிச்சந்திரன்
சென்னை : தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில், அரசு மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் மோதிரம் வழங்கப்படும் என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை அறிவித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை கௌரவிக்கும் விதமாக, ஆளும் தவெக அரசு தாய்மான் தங்க மோதிரம் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் வாயிலாக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அரசு தங்க மோதிரம் வழங்க உள்ளது. ஜுன் 22 முதல் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. ஆகையால், ஜுன் மாதத்திலிருந்து நான்கு மாதங்களுக்கு தேவையான 1 லட்சத்து 28 ஆயிரத்து 499 தங்க மோதிரங்களை பயனாளிகளுக்கு வழங்க இரண்டு தங்க நகை விற்பனையாளர்களை அரசு தேர்வு செய்துள்ளது.
இந்த நிலையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குவதற்கும், அதற்கான பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் சோமசுந்தரம் மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளார்.
அதில், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை செயல்படுத்துவதற்கும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பதற்கும், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவை அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வார இறுதிக்குள் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை நடத்த வேண்டும். மாவட்ட சுகாதார அலுவலர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருடன் தனிப்பட்ட முறையில் ஒருங்கிணைந்து, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
மேலும் கூட்டத்தின் போது, தங்க மோதிரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கு லாக்கர் சேமிப்பு அறையை அடையாளம் கண்டு தயார் நிலையில் வைத்தல், லாக்கருக்கான இரட்டைச் சுவர் பாதுகாப்பு மற்றும் பொருத்தமான இடத்தை வழங்க வேண்டும். லாக்கர் அமைக்கப்படும் அறையின் ஜன்னல்கள் உள்ளிட்ட திறந்துள்ள பகுதிகளை பாதுகாப்பாக அடைக்க வேண்டும்.
லாக்கர் வைக்கப்படும் மையங்களில் சிசிடிவி கருவிகளைப் பெற்று நிறுவ வேண்டும். சிசிடிவி கேமராக்கள் பாதுகாப்பு பெட்டகத்தை சுற்றிலும் 3 இடங்களில் பொருத்த வேண்டும்.
திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரி மற்றும் பாதுகாவலரை அடையாளம் கண்டு நியமனம் செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் ஒருங்கிணைந்து தொடக்க விழா நிகழ்ச்சியைத் தயாரிக்க வேண்டும். மோதிரம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மையத்திலிருந்து பிற மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்காக, அரசு ஊழியர் மற்றும் வாகனத்தை அடையாளம் நியமனம் செய்ய வேண்டும்.
தங்க மோதிரம் திட்டத்தில் யாரெல்லாம் தகுதியுடையவர்
- தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் தகுதி உடையவர்கள்
- அரசு மருத்துவமனையில் பிரசவிக்கும் கர்ப்பிணிகள் தகுதி உடையவர்கள்
கர்ப்பிணி PICME மற்றும் RCH-ID பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரமாக ரேஷன் கார்டு, வாக்களர் அடையாள அட்டை, ஆதார்கார்டு, தொழிலாளர் நல வாரியத்தால் அளிக்கப்பட்ட அடையாள அட்டை, அஞ்சல்துறையின் முகவரி அடையாள அட்டை, இருப்பிட சான்றிதழ் அதில் ஏதாவது ஒன்று போதுமானது.
எத்தனை குழந்தைக்கு வழங்கப்படும்
புதிதாகப் பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் வழங்கப்படும்.
எத்தனை குழந்தைகள் என்பதை கணக்கில் கொள்ளப்படமாட்டாது. அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும்.
| இதையும் படிங்க: அனிதாவின் தியாகம் வீண் போகாது, நீட் தேர்வை தூக்கி எறியும் நாள் வரும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா |
குழந்தை பிறப்பின் போது எதிர்பாராத விதமாக தாய் இறந்து விட்டால் புதிதாகப் பிறந்த குழந்தைக்கான தங்க மோதிரம், அனைத்து அங்கீகாரச் சான்றுகளுடன் தாயின் பாட்டி, பாதுகாவலரிடம் வழங்கப்படும்.
குழந்தைப் பிறந்தப் பின்னர் அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு பச்சிளங்குழந்தை பராமரிப்புப் பிரிவில் (SNCU) அனுமதிக்கப்பட்டு, வீடு திரும்பினால் இத்திட்டத்திற்குத் தகுதியுடையவர் ஆவார்.

யாருக்கு எல்லாம் கிடைக்காது
- தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள்
- தனியார் மருத்துவமனையில் பிறந்தாலும் உடல் நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு பச்சிளங்குழந்தை பராமரிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு கிடைக்காது
- இறந்து பிறக்கும் குழந்தை, கருப்பையினுள் குழந்தை இறப்பு
வழங்குவதற்கு முன் சரிபார்க்கும் முறை
தமிழ்நாட்டில் வசிப்பதற்கான சான்று , மருத்துவமனையின் டிஸ்சார்ஜ் சம்மரி , தாயின் பயோமெட்ரிக் சரிபார்ப்பு ஆதார்-கைரேகை மற்றும் முக அங்கீகாரம், தங்க மோதிரம் உள்ள பிளிஸ்டர் பேக்கில், தாயின் RCH ஐடியை வரிசை எண்ணுடன் இணைத்து PICME பதிவு செய்ய வேண்டும்.
ஒரு கிராம் தங்க மோதிர அட்டை, சரிபார்ப்பிற்காக CCTV கேமராவின் முன் காண்பிக்கப்பட வேண்டும். குழந்தைப் பிறந்த பின்னர் தங்க மோதிரம் கொடுத்து வீட்டிற்கு காலை 9 மணி முதல் 3 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் சுமார் 4.5 லட்சம் பிரசவங்களில், 85 சதவீதம் சீமாங் மையம் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 3,82,500 பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. மாநிலம் முழுவதும் உள்ள துணை மாவட்ட மருத்துவமனை, வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற சமூக சுகாதார மையம், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய துணை மையங்களில் 64,000 பிரசவங்கள் சுமார் 15 சதவீதம் நடைபெறுகின்றன.
தங்க மோதிரம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து பிற மருத்துவமனைகளுக்கு தங்க மோதிரத்தை பகல் நேரத்தில் அதிகாரிகளுக்குச் சொந்தமான அல்லது வாடகைக்கு எடுக்கப்பட்ட அரசு வாகனங்கள் மூலமாக மட்டுமே கொண்டு செல்ல வேண்டும், உள்ளிட்ட வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளனர்.
மருத்துவர்கள் கூறுவது என்ன?
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருக்கும் ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்களை தங்க மோதிர திட்டத்தின் பொறுப்பாளர்களாக உட்படுத்தும்போது சுகாதார மற்றும் மருத்துவ சேவையில் தொய்வு ஏற்படும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், "ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருக்கும் ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்களை தங்க மோதிர திட்டத்தின் பொறுப்பாளர்களாக உட்படுத்தும்போது சுகாதார மற்றும் மருத்துவ சேவையில் தொய்வு ஏற்படும். எனவே, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள நேரடியாக வங்கி (டைரக்ட் பேங்க் டிரான்ஸ்பர்) மூலம் பெற்றுக் கொள்ளும் திட்டம் அமல்படுத்தப்பட்டால் மேற்கூறிய கூடுதல் செலவினங்கள் குறைக்கப்பட்டு எளிய முறையில் திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படலாம். இத்தகைய செயல்கள் மருத்துவத் துறைக்கு மிகவும் கடினமான பணியாகும்.
ஆகையால், அரசு இத்திட்டத்தை0 நேரடியாக சமூக நலத்துறையின் மூலம் அல்லது அவர்களது துணையுடன் பேங்க் டிரான்ஸ்பர் மூலமாக, ஆதார் மற்றும் பிக்மி எண்ணுடன் இணைக்கப்பட்ட பயனாளிகளுக்கு நேரடியாக அருகில் உள்ள அரசு வங்கிகள் வாயிலாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

