ETV Bharat / state

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெறுவது எப்போது?

நடந்து முடிந்த தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததால், அரசியல் காரணங்களால் திமுகவை சேர்ந்த மேயர் பிரியா, மாநகராட்சி பணிகளில் ஆர்வம் காட்டவில்லை என்ற கருத்து நிலவி வருகிறது.

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் - கோப்புப்படம்
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் - கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 3, 2026 at 10:52 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் எப்போது நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் மக்கள் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடத்தி அதற்கு தீர்வு காணும் வகையில் ஒவ்வொரு மாத இறுதியிலும் மாநகராட்சி மன்ற கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் நடைபெறும் மாமன்ற கூட்டத்தில், 200-க்கும் மேற்பட்ட வார்டுகளின் கவுன்சிலர்கள் கலந்துகொண்டு மக்கள் பிரச்சினைகளை எடுத்துரைத்து அதற்கான திட்டங்களையும் தீர்வுகளையும் கேட்டுப் பெறுவர்.

மேலும் சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளின் நிலை, பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு ஆகியவை குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும். மேலும் மாத துவக்கத்தில் வார்டு கமிட்டி கூட்டமும் நடத்தப்படுவது வழக்கம்.

இதையும் படிங்க.. பி.இ., பி.டெக். படிப்பில் சேர்வதற்கு சிறந்த கல்லூரிகளை கண்டறிவது எப்படி? புதிய வசதி அறிமுகம்

ஆனால் தேர்தலுக்கு பின்னர் இதுவரையில் மாநகராட்சி மன்ற கூட்டம் நடைபெறாமல் இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தேர்தலுக்கு முன்பாக கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி கடைசியாக மாமன்ற கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு கடந்த, மார்ச் ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்களில் மாநகராட்சி மன்ற கூட்டம் நடத்தப்படவில்லை.

தேர்தலுக்குப் பிறகு கடந்த மே 7-ஆம் தேதி தேர்தல் நடத்தை விதிகள் திரும்ப பெறப்பட்டதால், மே மாதத்திற்கான வார்டு கமிட்டி கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தக் கூட்டமும் நடத்தப்படவில்லை. இதனைத் தொடர்ந்து மே மாதத்திற்கான மாமன்ற கூட்டம், மாத இறுதியில் நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் நடத்தப்படாமல் இருந்தது மாமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஏமாற்றத்தையே தந்தது.

இந்த சூழலில் சென்னை மாநகராட்சி ஆணையராக செயல்பட்டு வந்த குமரகுருபரன் இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த பொறுப்பில் ஜி.எஸ்.சமீரன் நியமிக்கபபட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜி.எஸ் சமீரன் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தினந்தோறும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் இந்த ஆய்வு பணிகளில் சென்னை மாநகராட்சியின் மேயர் எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொதுவாக சென்னை மாநகராட்சி ஆணையருடன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா களப்பணிகளை ஆய்வு செய்வது வழக்கம். ஆனால் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சென்னை மாநகராட்சியின் அனைத்து பணிகளையும் மாநகராட்சி ஆணையரே கண்காணித்து வருகிறார்.

ஆனால் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவிற்கு காலில் எலும்புமுறிவு ஏற்பட்டதால் சில மாதம் ஓய்வில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் ஒரு வாரத்திற்கு முன்பாக, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மீண்டும் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து பணிகளை துவங்கியதாக கூறப்படுகிறது.

இதே சூழலில் சென்னை மாநகராட்சியின் துணை மேயர், நிலைக் குழுத் தலைவர்கள், மற்றும் மண்டல தலைவர்களும் மாநகராட்சி நிர்வாகப் பணியில் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக, மண்டல குழுக் கூட்டம் மற்றும் நிலைக்குழு கூட்டம் நடத்த முடியாமல் போனதால் மாமன்ற கூட்டம் நடத்தப்படவில்லை என மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. நிர்வாக பணிகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தாததால் சென்னையில் மழைநீர் கால்வாய் அமைப்பது, சாலைகள் சீரமைப்பது, புதிய சாலைகள் அமைப்பது, கழிவுநீர் அகற்றம் போன்ற பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க.. விஜய் அண்ணா எங்களுக்கு தாய்மாமன் சீர் வேண்டாம் டாஸ்மாக் கடையை மூடினால் போதும்; பெண்கள் வைத்த 'சபாஷ்' கோரிக்கை

நடந்து முடிந்த தேர்தலில் திமுகவுக்கு மாற்றாக தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததால், அரசியல் காரணங்களால் திமுகவை சேர்ந்த மேயர் பிரியா, மாநகராட்சி பணிகளில் ஆர்வம் காட்டவில்லை என்ற கருத்து நிலவி வருகிறது. இருப்பினும், சமீபத்தில் நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் மாநகராட்சி அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தப்பட்டதாகவும், இந்த கூட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக நடத்தப்படாமல் இருந்த மாமன்ற கூட்டத்தை ஜூன் இறுதியில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.