மெட்ராஸ் ஹைகோர்ட் பெயரை சென்னை உயர்நீதிமன்றம் என மாற்ற முடியுமா? சட்ட சிக்கல்கள் என்ன?
உயர்நீதிமன்றங்களின் பெயரை மாற்றுவதற்கான சட்டம், கடந்த 2016-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் தற்போது வரை நிலுவையில் உள்ளது.

Published : September 2, 2026 at 7:00 PM IST
-BY கே.சசிக்குமார்
மதராஸ் மாநிலம் என்பது தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. மெட்ராஸ் என்ற பெயரும் சென்னை என்று மாறி 30 ஆண்டுகளாகிவிட்டன. இதுபோன்று, மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பெயரை சென்னை உயர்நீதிமன்றம் என மாற்ற முடியுமா? அதில் உள்ள சட்ட சிக்கல்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்பது தமிழ்நாடு அரசு உருவாக்கியது அல்ல. இது, 1862-இல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், இந்திய உயர்நீதிமன்றங்கள் சட்டம்-1861-இன் கீழ் உருவாக்கப்பட்டது. இது மத்திய அரசின் சட்டமாகும். எனவே, மத்திய சட்டத்தை மாற்ற நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உண்டு. மாநில அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை.
பெயரை மாற்ற என்ன செய்ய வேண்டும்?
முதலில் தமிழ்நாடு சட்டப்பேரவையில், "மெட்ராஸ் ஹைகோர்ட்" என்பதை "சென்னை உயர்நீதிமன்றம்" என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். பின்னர், மாநில அரசின் தீர்மானத்தை மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மாநில அரசின் தீர்மானத்தை மத்திய சட்ட அமைச்சகம் ஏற்றுக்கொண்ட பின், நாடாளுமன்றத்தில் ஹைகோர்ட் பெயர் மாற்ற சட்டம் (Alteration of Names) என்ற புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும். அந்த சட்டம், மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேற வேண்டும்.
| இதையும் படிங்க.. "மொபைல் போனை வீட்டிலேயே வைத்து விட்டு வாருங்கள்" - கோயில்களில் அதிகரிக்கும் கூட்டத்தால் அமைச்சரின் ஆலோசனை |
அந்த சட்டம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட பின், குடியரசுத்தலைவர் கையெழுத்திட்ட பிறகு அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றப்படும்.
கடந்த 2016ஆம் ஆண்டு, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய தமிழ்நாடு சட்டமன்றத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. அதே ஆண்டு மெட்ராஸ், மும்பை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களின் (Alteration of Names) பெயரை மாற்ற சட்டம் வகுக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது.

கடந்த 2016-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த சட்டம், கடந்த 10 ஆண்டுகளாக நிறைவேறாமல், நாடாளுமன்றத்தில் தற்போது வரை நிலுவையில் உள்ளது. அதனால் தான் நகரங்களின் பெயர்கள் மாறினாலும், உயர் நீதிமன்றங்களின் பெயர்களை மாற்ற முடியவில்லை.
உதாரணமாக மெட்ராஸ் என்பது சென்னை மாநகரம் என மாறினாலும் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் அப்படியே உள்ளது. பம்பாய் என்பது மும்பை என மாறினாலும் பாம்பே ஹைகோர்ட் என அப்படியே உள்ளது. கல்கத்தா என்பது கொல்கத்தா என மாறிய பிறகும் கல்கத்தா உயர்நீதிமன்றம் என்றே தொடர்கிறது.
இந்நிலையில் நீதிமன்றத்தின் பெயரை மாற்றுவதில் உள்ள சிக்கல்கள் என்ன ? பெயரை மாற்றலாமா? என்பது குறித்து சட்ட வல்லுநர்கள் தரும் விளக்கத்தை பார்க்கலாம்.
பி.டி பெருமாள், மூத்த வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்
"பாரம்பரியம் மிக்க மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை, சென்னை உயர்நீதிமன்றம் என்று மாற்றுவதை விட தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று மாற்றுவதே சரியாக இருக்கும்.
இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களான கல்கத்தா, பாம்பே, மெட்ராஸ் ஆகிய இடங்களில் உள்ள 3 உயர்நீதிமன்றங்கள் 1861-இல் சார்ட்டர்டு உயர்நீதிமன்றங்களாக இங்கிலாந்து ராணியால் இந்திய உயர்நீதிமன்றங்கள் சட்டம் (Indian High courts Act, 1861) மற்றும் அதிகார பத்திர பிரகடன சட்டம் (Letters Patent Act, 1865) ஆகிய சட்டங்கள் மூலம் நேரடியாக உருவாக்கப்பட்டன.
இந்திய மக்களை கொடுமைப்படுத்துவது, மதமாற்றம் செய்வது மற்றும் மக்களின் உரிமைகளை பறித்த கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக இங்கிலாந்து எம்.பி.க்கள் தொடர்ந்து முன்வைத்தனர். இதனால், கிழக்கிந்திய கம்பெனி நடத்திய மாகாண (provincial) உச்சநீதிமன்றம்தான், இங்கிலாந்து ராணியின் அறிவிப்புக்குப்பின் மெட்ராஸ் உயர் நீதிமன்றமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இங்கிலாந்து ராணியால் பிரகடனம் செய்யப்பட்ட உயர்நீதிமன்றத்தின் பெயரை மாற்ற, மாநில அரசு மட்டும் தீர்மானம் நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தமிழகத்தில் உள்ள வழக்கறிஞர் சங்கங்கள் அல்லது பொதுமக்கள் சார்பில் மத்திய அரசுக்கு பெயர் மாற்ற கோரிக்கை வைக்கலாம். அந்த கோரிக்கையை நாடாளுமன்றத்தில் சட்டமாக இயற்றுவதற்கு மத்திய அரசு பரிந்துரை செய்ய வேண்டும்.
பரிந்துரையை ஏற்று புதிய சட்ட மசோதா தயாரித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதன் மீது விவாதம் நடத்தி பெருவாரியான ஆதரவில் பெயர் மாற்றத்துக்கான சட்டத்தை கொண்டு வரலாம்" என்று தெரிவித்தார்.
| இதையும் படிங்க.. 110 விதியின் கீழ் வழக்குகள் வாபஸ் ஏன்? அமைச்சர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள் |
ராஜா கார்த்திகேயன், வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்
இங்கிலாந்து ராணியால் பிரகடனம் செய்யப்பட்ட ஒருங்கிணைந்த நீதி அமைப்பாக மெட்ராஸ், மும்பை, கல்கத்தா ஆகிய உயர்நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன. அவ்வாறு உருவாக்கப்பட்ட மூன்று முக்கிய நீதிமன்றங்கள்தான் சுதந்திரத்திற்கு பின்பும் இன்று வரை சார்ட்டர் ஹைகோர்ட் என்று அழைக்கப்படுகின்றன.

இந்தியாவில் முகலாய மற்றும் முஸ்லிம் மன்னர்களின் நீதி பரிபாலன அமைப்புகள் மூலம் நீதி நிர்வாகம் நடைபெற்று வந்தது. சிவில் வழக்கை சாதர் திவானி அதாலத் என்ற அமைப்பும், குற்றவியல் வழக்கை பவுஜ்தாரில் அதாலத் என்ற அமைப்பும் நீதி பரிபாலனம் செய்து வந்தன.
மேற்படி அமைப்புகள் அனைத்தையும் மாற்றிவிட்டு மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற புதிய நீதி வழங்கும் நிறுவனத்தை பிரிட்டிஷ் இந்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி, உயர்நீதிமன்றமே சிவில் வழக்குகளையும் குற்றவியல் வழக்குகளையும் கையாளும் அமைப்பாக உருவாக்கப்பட்டது.
இந்திய நீதித்துறையின் தற்போதைய நீதி பரிபாலன முறை 1862-இல் உருவாக்கப்பட்ட உயர்நீதிமன்றங்களின் வழித்தோன்றல்கள்தான். ஆகையால், இந்திய நீதித்துறை உருவாக்கப்பட்ட வரலாற்றின் மைல் கல்லாக விளங்கும் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பெயரை அப்படியே தொடரலாம்" என்று வரலாற்று அடிப்படையில் விளக்கம் அளித்தார்.

