EXPLAINER: விதி எண் 110 என்றால் என்ன? இந்த அறிவிப்புகள் அவையில் ஏன் விவாதிக்கப்படுவதில்லை?
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சிக்காலத்தில் சட்டப்பேரவையின் விதி எண் 110-ன் கீழ் சுமார் 453 அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். இந்த விதியின் கீழ் வெளியிடப்பட்ட அதிக அறிவிப்பு இதுவாகும்.

Published : September 2, 2026 at 6:34 PM IST
-BY பாண்டியராஜ்.ப
சென்னை: சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் விதி எண் 110 என்றால் என்ன? என்பது குறித்து இந்தச் சிறப்பு தொகுப்பில் பார்க்கலாம்.
கடந்த ஆகஸ்ட் 05- ஆம் தேதி முதல் தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாள்தோறும் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களும், அத்துறை தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகி வருகின்றன. இதற்கிடையே, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு சட்டப்பேரவையின் விதி எண் 110- ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை அவ்வபோது வெளியிட்டு வருகிறார்.
விவாத பொருளாக மாறிய விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு
அந்த வகையில், விதி எண் 110- ன் கீழ் இன்றும் அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். குறிப்பாக, சட்டப்பேரவையில் விதி எண் 110- ன் கீழ், கடந்த ஆட்சியில் ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகள் மீது போடப்பட்டப் போராட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என அறிவித்ததைத் தொடர்ந்து, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே காரசார விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய திமுக கொறடா எ.வ.வேலு, "விதி எண் 110-ன் விதியின் கீழ் மக்களுக்கான நலத்திட்டங்களை அறிவிப்பது தான் வழக்கம்; ஆனால் வழக்குகளை ரத்து செய்வது குறித்து அறிவிப்பது இதுவரை வழக்கத்தில் இல்லை" எனக் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், "முதலமைச்சர் விரும்பும் எந்த அறிவிப்பையும் விதி எண் 110-ன் கீழ் வெளியிடலாம்" எனத் தெரிவித்தார்.
சட்டப்பேரவை விதிகள்
அரசியலமைப்பின் 208(1) பிரிவின்படி ஏற்படுத்தப்பட்டதுதான் தமிழ்நாடு சட்டப்பேரவையின் விதிகள். இப்பிரிவில் மொத்தம் 22 அத்தியாயங்களும், 292 விதிகளும் உள்ளன. இந்த 292 விதிகளின்படிதான் சட்டப்பேரவையை நடத்த வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களும் நடந்து கொள்ள வேண்டும் என்பது விதி. அந்த 292 விதிகளில் ஒன்றுதான் விதி எண் 110.
விதி எண் 110 என்றால் என்ன?
தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 110 என்பது பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முக்கிய அறிவிப்பை அல்லது அறிக்கையை முதலமைச்சர் அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சர், பேரவைத் தலைவர் அனுமதியுடன் சட்டப்பேரவையில் வெளியிடுவதற்கான ஒரு சிறப்பு விதிமுறையாகும்.
விதி எண் 110 விதியின் முக்கிய அம்சங்கள்
பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் குறித்து முதலமைச்சர் அல்லது அமைச்சர் அறிக்கை வெளியிடலாம். விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் பேரவைத் தலைவரின் அனுமதியைக் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
அறிக்கை வெளியிடப்படும் நேரத்தில், அந்த அறிக்கையின் மீது எந்த விவாதமும் இருக்கக்கூடாது. விதி எண் 110-ன் கீழ் அறிக்கையை வெளியிடும் முன், அதற்கான தேதியை முன்கூட்டியே தெரிவித்து வெளியிடக்கூடிய அறிக்கையின் நகலை சட்டப்பேரவை செயலாளரிடம் வழங்க வேண்டும்.
விதி எண் 110-ன் கீழ் அறிக்கை வெளியிட காரணம்
மக்களுக்கான புதிய திட்டங்களோ அல்லது அறிவிப்புகளோ சட்டப்பேரவையில் வெளியிடும்போது, அது தொடர்பாக அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் விவாதத்தில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அறிவிப்பை வெளியிடும்போது அதனை அமல்படுத்தவோ அல்லது அதனை செயல்படுத்த விவாதத்தின் மூலம் நேர விரயம் மற்றும் தாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதன் காரணமாக, பொது முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு அறிவிப்புகள், பல்வேறு காலகட்டங்களிலும் முதலமைச்சர்களால் விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கப்படுகிறது. அவ்வாறு அறிவிக்கப்படும் திட்டங்கள் மீது ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதிக்கவோ, கருத்துக்கள் கூறவோ முடியாது, நன்றி மட்டுமே தெரிவிக்க வேண்டும்.

விதி எண் 110-ஐ அதிகம் பயன்படுத்திய ஜெயலலிதா
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 1991- ஆம் ஆண்டு முதல் முறையாக முதலமைச்சராகப் பதவி ஏற்றபோதும், அதற்கு அடுத்தபடியாக 2001 ஆம் ஆண்டு பதவியேற்றபோதும் விதி எண் 110-ஐ பெரிய அளவில் பயன்படுத்தாத நிலையில், கடந்த 2011 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் விதி எண் 110-ஐ அதிகமுறைப் பயன்படுத்தியிருந்தார். குறிப்பாக, ரூ.1,72,196 கோடி மதிப்பீட்டில் 181 அறிவிப்புகளை ஜெயலலிதா வெளியிட்டிருந்தார்.
ஜெயலலிதாவை மிஞ்சிய எடப்பாடி பழனிசாமி
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர், முதலமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி கே பழனிசாமி தனது ஆட்சிக்காலத்தில் விதி எண் 110-ன் சுமார் 453 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதுவே விதி எண் 110-ன் கீழ் அதிகளவில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் ஆகும்.
விதி எண் 110- ன் படி நிலைகள் என்ன?
விதி எண் 110- ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டாலே அந்த திட்டம் நடைமுறைக்கு வந்துவிடும் என்று அர்த்தமில்லை; இவ்விதியின் கீழ் அறிவிக்கப்படும் திட்டத்திற்கு முதலில் அரசாணை வெளியிட வேண்டும், அதன் பின்னர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, செயல்பாட்டுக்கு வர வேண்டும்; அதன் பின்னரே அது பொதுமக்களுக்கு பயனளிக்கக் கூடிய வகையில் மாறும்.
அறிவிப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை
கடந்த 2021- ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்த பின் தமிழ்நாடு அரசின் நிதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அதற்கு முன் இருந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் விதி எண் 110 - ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று புத்தகம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், கடந்த 2011 முதல் 2021 வரை நடைபெற்ற அதிமுக ஆட்சிக் காலத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110- ன் கீழ், ரூ.3.27 லட்சம் கோடி அளவில் சுமார் 1,704 அறிவிப்புகள் வெளியிடப்பட்ட போதும், சுமார் 87 ஆயிரம் கோடி மதிப்பிலான 1,167 அறிவிப்புகள் மட்டுமே செயல்படுத்தப்பட்டு இருக்கின்றன; மீதமுள்ள அறிவிப்புகளுக்கு அரசாணைகள் கூட பிறப்பிக்கப்படாமலும், நிதிகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் பணிகள் தொடங்கப்படாமலும் நிலுவையில் இருப்பதாகவும் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
விதி எண் 110 என்பது அறிவிப்பு மட்டுமே
விதி எண் 110 என்பது அரசின் முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகளை சட்டப்பேரவையில் விவாதம் நடத்தாமல் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்வதற்கான நடைமுறை மட்டுமே, இந்த விதியின் கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகள் உடனே நிறைவேறிவிட்டது என்று அர்த்தம் இல்லை. பல்வேறு நிலைகளைக் கடந்து இந்த அறிவிப்புகள் செயல்பாட்டிற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

