‘பொங்கலுக்கு மட்டுமல்ல... பெண்களுக்கும் ஸ்பெஷலான சிறுகிழங்கு’ - விவசாயிகளின் வருத்தம் ஏன்?
சந்தையில் இடைத்தரகர்களால் போதிய விலை கிடைப்பதில்லை என்பதால், நாங்கள் சாலையோரம் விற்பனை செய்து வருகிறோம் என சிறுகிழங்கு விவசாயிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

Published : January 10, 2026 at 7:11 PM IST
By - ஆர்.மணிகண்டன்
“பொங்கலுக்கு மட்டுமல்ல.. பெண்களுக்கு பொங்கல் சீர் வரிசையில் வைத்து கொடுக்கவும், பொது படையலில் வைத்து வழிபடவும் பொதுமக்கள் விரும்பி வாங்குவார்கள். சேனை, கருணைக் கிழங்கை விட சிறுகிழங்கிற்கு தான் மவுசு அதிகம். ஆனால், காட்டுப்பன்றிகளின் தொல்லை தான் தாங்க முடியவில்லை” - விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்
திருநெல்வேலி: 'உழவுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் நாளே பொங்கல் திருநாள்' தமிழ்நாட்டில் எத்தனையோ திருவிழாக்கள், பண்டிகைகள் கொண்டாடப்பட்டாலும் தமிழர்களின் முக்கிய பண்டிகையாகவும், மாநிலத்தின் அடையாளமாகவும் கருதப்படுவது பொங்கல் திருநாள். இதனால் தான் பொங்கல் திருநாள் தமிழர் திருநாள் என்றழைக்கப்படுகிறது. மேலும், சாதி, மதம், இனம் என அனைத்தையும் கடந்து மக்கள் ஒற்றுமையாகவும், சமத்துவத்தோடும் கொண்டாடக்கூடிய தைப்பொங்கல் தமிழர்களின் கலாச்சாரத்தையும், இயற்கையுடனான மனித பிணைப்பையும் உலகிற்குப் பறைசாற்றுகிறது. அப்படிப்பட்ட பொங்கலை காண வெளிநாட்டில் இருந்தெல்லாம் மக்கள் தமிழகத்திற்கு வருவது வழக்கம்.

அந்த வகையில், ஆண்டுதோறும் தை மாதம் ஒன்றாம் தேதி கொண்டாடப்படும் இந்த பண்டிகையில் போது, உழவுப்பணிக்கு உறுதுணையாக இருக்கும் கதிரவனுக்கு நன்றி சொல்லும் விதமாக, பொங்கல் வைத்து தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை படையலில் படைப்பர். அந்த படையலில் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது தித்திப்பான கரும்புதான். தொடர்ந்து, வேஷ்டி சட்டை, பொங்கல் பானைகள், மஞ்சள் குலை போன்ற பொருட்கள் பொங்கல் பண்டிகையின் அடையாளமாக திகழ்கிறது.
சிறுகிழங்கில் அப்படி என்ன சிறப்பு
ஆனால், தென்மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையின் போது தவிர்க்கமுடியாத உணவாக சிறுகிழங்கு திகழ்கிறது. தமிழ்நாட்டிலேயே திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டுமே இந்த சிறுகிழங்கு விளைவிக்கப்பட்டது. ஆனால், நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் தற்போது இந்த 3 மாவட்டங்களில் சிறுகிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பிட்டு சொல்லப்போனால், தற்போதைய தென்காசி மாவட்டம், கடனா அணை பாசன விவசாயிகள் தான் முதல்முதலாக சிறுகிழங்கை பயிரிட்டு அறிமுகப்படுத்தினர்.
தற்போது, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் சிறுகிழங்கு அதிகளவில் பயிரிடப்படுகிறது. பொதுவாகவே, கிழங்கு வகைகளில் உருளைக்கிழங்கு, மரவள்ளி கிழங்கு, சேனைக்கிழங்கு என அனைத்து கிழங்குகளுமே சுவைப்பதற்கு ருசியாக தான் இருக்கும். அப்படி என்ன தனி சுவை இதில் இருக்கிறது? என்று கேட்கும் அளவுக்கு சிறப்பு வாய்ந்தது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

மருத்துவ குணம் நிறைந்த சிறுகிழங்கு
மற்ற கிழங்குகளை விட சிறிய அளவிலான இந்த சிறுகிழங்கு நல்ல மனமும், சுவையும் கொண்டதாக உள்ளது. இதனை சிலர் சீன உருளைக்கிழங்கு என்றும் அழைக்கின்றனர். இதில், உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தடுத்து செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. தாதுக்கள் உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பொன்மொழிக்கேற்ப இந்த சிறிய கிழங்கு இவ்வளவு பயன்களை தருமா? என வியக்கவைக்கிறது.
இந்த கிழங்கை குழம்பு வைத்து சாப்பிடலாம், பொறியல் வைத்தும் சாப்பிடலாம். எதுவுமே சேர்க்காமல் வேக வைத்து அப்படியே சாப்பிட்டால் கூட மிகவும் ருசியாக இருக்கும். எனவே தான், சிறுகிழங்கு தென்மாவட்ட மக்களின் தின்பண்டமாகவும் கருதப்படுகிறது. இதன் தனித்துவமான சுவையையும் தாண்டி, பொங்கல் சீர்வரிசையிலும் முக்கிய பங்கு வகுக்கிறது சிறுகிழங்கு.

சிறுகிழங்கு சாகுபடி தீவிரம்
அதாவது, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையின் போது, திருமணமான புதுபெண்களுக்கு பொங்கல் சீர்வரிசை வழங்குவார்கள். அதில் அனைத்து வகையான காய்கறிகளையும் வாங்கி வைக்க வேண்டும். எது இருந்தாலும் இல்லையென்றாலும் சிறுகிழங்கு மட்டும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும். சிறுகிழங்கு இருந்தால் தான் பொங்கல் சீர்வரிசையை கொண்டு செல்லவே முடியும் என்றால் எந்த அளவுக்கு முக்கியம் என்று பாருங்கள்... அதனால் தான் நெல்லையில் சிறுகிழங்கு சாகுபடி தீவிரமாக நடக்கிறது.
இந்நிலையில், அம்பாசமுத்திரம் பகுதியில் அதிகளவு விவசாயிகள் சிறுகிழங்கு பயிரிட்டு இருப்பதை அறிந்து, ஈடிவி பாரத் ஊடக குழு சார்பில் அப்பகுதிக்கு பயணப்பட்டோம். விவசாயத்திற்கு பேர் போன அம்பாசமுத்திரம் நாம் சென்றபோது, நெல், வாழை, கிழங்கு உள்ளிட்ட பயிர்களால் பச்சைப் பசேல் என பச்சை போர்வை போர்த்தியது போல காட்சியளித்தது. அம்பாசமுத்திரத்திலிருந்து இடைகால் செல்லும் சாலையில், பெண்கள் தரையில் அமர்ந்தபடி சிறுகிழங்கை தீவிரமாக அறுவடை செய்து கொண்டிருந்தனர். அப்படியே, அவர்கள் அருகில் சென்று பேச்சு கொடுத்தோம்.

அப்போது, ‘இந்த ஆண்டு விளைச்சல் பரவாயில்ல.. ஆனா இந்த காட்டுப்பன்றிகள் தொல்லை தான் தாங்க முடியல’ என வேதனை தெரிவித்தனர். ஏனென்றால், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் அடிக்கடி காட்டுப்பன்றிகள் வந்து செல்வது வழக்கம். அதிலும், தென்மாவட்ட மக்களுக்கு மட்டுமின்றி, பன்றிகளுக்கும் கிழங்குகள் பிடித்த பண்டம் என்பதால் பயிர்களை நாசம் செய்து விடுகிறது.
மேலும், சந்தைக்கு கொண்டு சென்றால், உரிய விலை கிடைப்பதில்லை என்பதால், விவசாயிகள் வயலுக்கு அருகே உள்ள சாலையில் போட்டு, தாங்களே சொந்தமாக கிழங்குகளை விற்பனை செய்கின்றனர். அந்த காட்சிகளையும் நம்மால் காண முடிந்தது. இதுகுறித்து கேட்ட போது, மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றால், வெறும் 30 ரூபாய்க்கு தான் விற்பனையாவதாகவும், சுயமாக விற்பனை செய்யும்போது 50 ரூபாய் வரை தங்களது கிழங்குகளை விற்க முடிவதாகவும் அவர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.
பொங்கல் சீரில் முக்கிய பங்கு
இதுகுறித்து பள்ளக்கால் புதுக்குடி கிராமத்தை சேர்ந்த கனகா என்ற பெண் நம்மிடம் கூறியதாவது, “சிறுவயதிலிருந்தே நாங்கள் சிறுகிழங்கு விவசாயம் செய்து வருகிறோம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விளைச்சல் நன்றாக உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு சிறுகிழங்கு தான் சிறப்பு. பொங்கலுக்கு மட்டுமல்ல.. பெண்களுக்கு பொங்கல் சீர் வரிசையில் வைத்து கொடுக்கவும், பொங்கல் பண்டிகையின் பொது படையலில் வைத்து வழிபடவும் பொதுமக்கள் விரும்பி வாங்குவார்கள். சேனை, கருணைக் கிழங்கை விட சிறுகிழங்கிற்கு தான் மவுசு அதிகம். கேரளா, பாம்பே என அனைத்து ஊர்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைப்போம். ஆனால், காட்டுப்பன்றிகளின் தொல்லை தான் தாங்க முடியவில்லை” எனத் தெரிவித்தார்.
பசியை போக்கும் சிறுகிழங்கு
தொடர்ந்து வெள்ளையம்மாள் என்ற மூதாட்டி கூறுகையில், “எனக்கு 12 வயது இருக்கும் போதிருந்து சிறுகிழங்கை விவசாயம் செய்து வருகிறோம். பொங்கலுக்கு இந்த கிழங்குக்குத்தான் மதிப்பு. பொங்கல் சீரில் சிறுகிழங்கை வைத்து கொடுத்தால்தான் மதிப்பார்கள். அதுமட்டுமின்றி, சோறு இல்லாத வீட்டில் பசியைப் போக்கும் முக்கிய உணவாகவும் சிறுகிழங்கு திகழ்கிறது. உடலுக்கும் நல்லது என்பதால், மக்கள் இதனை விரும்பி வாங்கி செல்கின்றனர்” என்றார் வெள்ளையம்மாள்.
காட்டுப்பன்றியால் அழிந்து வரும் சிறுகிழங்கு விவசாயம்
அதைத் தொடர்ந்து பேசிய விவசாயி முகிலன், “எனது அப்பா காலத்திலிருந்து சிறுகிழங்கை பயிரிட்டு வருகிறோம். இந்த சிறுகிழங்கு உடலுக்கு ஆரோக்கியமானது. குறிப்பாக கேரள மாநிலத்தில் நடந்த ஆராய்ச்சியில் சிறுகிழங்கு நீரிழிவு நோய்க்கு சிறந்த உணவு என்று கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள். சிறுகிழங்கில் புது ரகத்தை பயிரிட்டதால், எனக்கு கேரள அரசு விருது வழங்கி கௌரவித்தது. அதைத்தான் தற்போதும் பயிரிட்டு வருகிறேன். தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டும்தான் சிறுகிழங்கு பயிரிடப்படும். கடனா நதி பாசனத்தில் தான் இந்த சிறுகிழங்கு உதயமானது. பொங்கல் சீரில் வைத்துக் கொடுப்பதற்காக, சிறுகிழங்கை மக்கள் விரும்பி வாங்குவார்கள்.
| இதையும் படிங்க: "கிலோ 15 ரூபாய்க்கு விற்றால் எப்படி கட்டுப்படியாகும்" - சேனைக்கிழங்கு விவசாயிகள் வேதனை |
தற்போது பொங்கல் பண்டிகை வருவதால் கிழங்கு அறுவடையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். இந்த வருடம் விளைச்சலும் நன்றாக இருக்கிறது. ஆனால் சந்தைக்கு கொண்டு சென்றால் தான், இடைத்தரகர்களால் போதிய விலை கிடைப்பதில்லை. எனவே, நாங்கள் சாலையோரம் விற்பனை செய்து வருகிறோம்” என்றார். மேலும், “ஆரம்பத்தில் அதிகளவில் சிறுகிழங்கு பயிரிடப்பட்டது. தற்போது காட்டுப்பன்றிகளின் தொல்லை அதிகரித்திருப்பதால், பல விவசாயிகள் சிறுகிழங்கு பயிரிடுவதை நிறுத்திவிட்டனர்” என்று வேதனையோடு தெரிவித்தார் விவசாயி முகிலன்.
அரசே விலை நிர்ணயம் கோரிக்கை
விவசாயி முகிலன் கூறுவதைப் போன்று, சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் சுமார் 150 ஏக்கரில் சிறுகிழங்கு பயிரிட்டு வந்தனர். காட்டுப்பன்றி தொல்லை மற்றும் போதிய விலை கிடைக்காதது போன்ற காரணத்தால், தற்போது வெறும் 40 ஏக்கரில் மட்டுமே சிறுகிழங்கை பயிரிட்டுள்ளனர். குறிப்பாக, இந்த சிறுகிழங்கு விளைச்சலுக்கு 6 மாதங்கள் வரை ஆகும். இந்த ஆறு மாசத்தில் காட்டுப்பன்றி, புழுக்கடி, கொசுக்கடி ஆகிய தொல்லைகளையும், பல சவால்களையும் சிறுகிழங்கு விவசாயிகள் சந்திக்க வேண்டியுள்ளது. ஆகையால், வருங்காலத்தில் சிறுகிழங்கு விவசாயம் செழிப்பதற்கு அரசின் கொள்முதல் நிலையம் அமைத்து, தமிழக அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

