"25 வருஷமா இந்த மண்ணுலதான் வாழுறோம்… போன்னா நாங்க எங்கே போவோம்?" – ராஜஸ்தான் நாடோடி மக்களின் கண்ணீர் குரல்
பல ஆண்டுகளாக வசித்து வரும் ஏழை குடும்பங்களின் நிலை, அவர்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published : August 31, 2026 at 10:53 PM IST
வேலூர்: "25 வருஷமா இந்த மண்ணுலதான் வாழுறோம். கூலி வேலை செஞ்சு பொழைக்கும் எங்களை போன்னு சொன்னா எங்க போவோம்" என்று வேலூர் மாவட்டம், காட்பாடியில் பல ஆண்டுகளாக கூடாரங்கள் அமைத்து வாழ்ந்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நாடோடி மக்கள் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தானில் இருந்து பிழைப்புத் தேடி தமிழகத்திற்கு வந்துள்ள இவர்கள், காட்பாடி வைபவ் நகர் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கூடாரங்கள் அமைத்து வசித்து வருகின்றனர். அங்கு 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
பாத்திரங்கள் விற்பது, கூலி வேலைகள் செய்வது உள்ளிட்ட சிறுசிறு தொழில்களை செய்து, தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். நிரந்தர வீடோ, சொந்த நிலமோ இல்லாத நிலையில், அவர்கள் வசிக்கும் கூடாரங்களே அவர்களின் வீடாகவும், வாழ்வாதாரத்தின் அடையாளமாகவும் இருந்து வருகின்றன.
அந்த கூடாரங்களை அகற்ற வேண்டும் என்ற தகவல் தங்களுக்கு கிடைத்துள்ளதாக அவர்கள் மக்கள் தெரிவிக்கின்றனர். "8 நாட்களுக்குள் கூடாரங்களை காலி செய்ய வேண்டும்; இல்லையெனில் ஜேசிபி இயந்திரம் மூலம் கூடாரங்கள் அகற்றப்படும்” என்று காட்பாடி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் சுதாகர், மிரட்டியதாக அப்பகுதி குற்றம்சாட்டியுள்ளனர். எனினும், இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பின் விளக்கம் வெளியாகவில்லை.
பல ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வரும் நிலையில், திடீரென இடத்தை காலி செய்யுமாறு கூறுவதால் தங்களது எதிர்காலம் என்னவாகும் என்ற அச்சத்தில் குடும்பத்தினர் தவித்து வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
"நாங்கள் இங்கு அகதிகளாக வந்தவர்கள்தான். கால் நூற்றாண்டு காலமாக இந்த ஊரையே எங்கள் சொந்த ஊராக நினைத்து வாழ்ந்து வருகிறோம். எங்கள் குழந்தைகள் இங்குதான் வளர்ந்து வருகிறார்கள். திடீரென கூடாரங்களை காலி செய்யச் சொன்னால், குழந்தை குட்டிகளுடன் நாங்கள் எங்கே செல்வோம்" என்று வேதனையுடன் அவர்கள் கூறுகிறார்கள்.
அதைத் தொடர்ந்து, இன்று வேலூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், தங்களை காலி செய்ய சொன்னால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி மனு அளித்தனர். கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
ஆக்கிரமிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் இருந்தாலும், அங்கு பல ஆண்டுகளாக வசித்து வரும் ஏழை குடும்பங்களின் நிலை, அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வளர்ச்சி, ஆக்கிரமிப்பு அகற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

