ETV Bharat / state

தவெகவில் இணையும் அனைவரும் தூய்மையானவர்கள் என்று நாங்கள் சொன்னோமா? மாணிக்கம் தாகூர் கேள்வி

கூட்டணியில் மாண்போடு நடந்து கொள்ளும் கட்சி காங்கிரஸ் என்று மாணிக்கம் தாகூர் கூறினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி - செய்தியாளர் சந்திப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி - செய்தியாளர் சந்திப்பு (ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 6, 2026 at 7:32 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: தவெகவில் இணையும் எல்லோரும் தூய்மையானவர்கள் என்று நாங்கள் சொன்னோமா? என்று கேள்வி எழுப்பிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், கூட்டணியில் மாண்போடு நடந்து கொள்ளக்கூடிய கட்சி காங்கிரஸ் என்றும் கூறினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக கட்சியின் மாநில செயற்குழு கூட்டம், சென்னை சத்தியமூர்த்திபவனில் இன்று நடைபெற்றது. இதில், முன்னாள் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை , சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க.. விஜய் தலைமையிலான தவெக அரசை கவிழ்க்க திமுக சதி - வைகோ பகிரங்க குற்றச்சாட்டு

இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் மாணிக்கம் தாகூர் கூறுகையில், "காமராஜர் பிறந்த நாளை இந்த ஆண்டு, அரசு நிர்வாகத்தில் தூய்மையையும் நேர்மையையும் வலியுறுத்தும் வகையில் மக்கள் இயக்கமாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

அவரைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசும்போது, "காமராஜரின் 123-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் "லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்!" என்ற முழக்கத்துடன் ஜூலை 13 முதல் ஜூலை 19 வரை ஒரு வாரம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இதன் தொடக்கமாக, ஜூலை 13-ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் காமராஜரின் பிரம்மாண்ட மணல் சிற்பம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. அதில் "கரைபடியாத கை" மற்றும் "லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்!" ஆகிய வாசகங்கள் பொறிக்கப்பட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரால் திறந்து வைக்கப்படவுள்ளது.
தொடர்ந்து, காமராஜர் முதன்முதலில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று முதலமைச்சராகப் பொறுப்பேற்கக் காரணமாக அமைந்த குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில், ஜூலை 15ஆம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதே நாளில் காலையில் விருதுநகரில் உள்ள காமராஜரின் இல்லத்தில் இம்முழக்கத்தை கட்சியின் மாநிலத் தலைவர் தொடங்கி வைக்கவுள்ளார்.

ஜூலை 17 முதல் 19 வரை மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் காமராஜரின் உருவப்படம் தாங்கிய பதாகைகள் வைக்கப்படும். இந்த பதாகைகளில் பொதுமக்கள் தங்களின் கைமுத்திரையையும், கையெழுத்தையும் பதித்து ஊழலுக்கு எதிரான தங்களின் ஆதரவை வெளிப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இறுதியாக ஜூலை 19ஆம் தேதி அன்று, மதுரையில் பல்லாயிரக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து "உயிர்க்கோளம்" (Human Chain Shape) அமைக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மாணவர்கள் அனைவரும் வரிசையாக நின்று, வான்வழியாகப் பார்க்கும்போது காமராஜரின் உருவமும் "லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்!" என்ற வாசகமும் தெரியும் வகையில் இக்காட்சி வடிவமைக்கப்படவுள்ளது" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து மாணிக்கம் தாகூர் பேசுகையில், "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, எப்போதும் கூட்டணி தர்மத்தை மாண்போடு பின்பற்றும் கட்சி. மற்றவர்களைப் போல நாங்கள் தேவையில்லாத இடங்களில் வெளியில் பேசுவதில்லை. இடம், பொருள், ஏவல் அறிந்து எங்கு பேச வேண்டுமோ அங்கு எங்களது கருத்துக்களை தகுந்த மரியாதையுடன் பதிவு செய்வோம்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வருவது உறுதி. அதற்கான அதிகாரப்பூர்வ தேதியைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியே முறைப்படி அறிவிக்கும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க.. மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டினால் தமிழ்நாடு காங்கிரஸ் எதிர்த்து போராடும் - மாணிக்கம் தாகூர்

ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளானவர்கள் தவெகவில் தொடர்ந்து இணைவது குறித்த கேள்விக்கு, "ஊழல் புகார்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் வழக்காக உள்ளன. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின் அதுகுறித்து கருத்து தெரிவிக்கப்படும்" என்று பதில் அளித்தார்.

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் பலர் தவெகவில் இணைகிறார்கள். எப்படி அவர்கள் தூய்மையானவர்களாக மாறுகிறார்கள் என்ற கேள்விக்கு, "அவர்கள் தூய்மையானவர்கள் என்று நாங்கள் சொன்னோமா? யார் எந்த கட்சியில் சேர வேண்டும் என்பது அவரவர் முடிவு. நாங்கள் கூட்டணியில் மாண்போடு நடந்து கொள்ளக்கூடிய கட்சி" என்று மாணிக்கம் தாகூர் பதில் அளித்தார்.