ETV Bharat / state

தவெக அரசை எதிர்த்துப் போராடவில்லை; மக்கள் பிரச்சனைக்காகத்தான் போராடுகிறோம் - சுப்பராயன் எம்.பி. பேட்டி

தவெக அரசுடன் கூட்டணி இல்லை; ஆட்சிக்கு ஆதரவு மட்டுமே என திருப்பூர் எம்.பி. சுப்பராயன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் எம்.பி. சுப்பராயன் பேட்டி
திருப்பூர் எம்.பி. சுப்பராயன் பேட்டி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 28, 2026 at 11:00 PM IST

1 Min Read
Choose ETV Bharat

திருப்பூர்: நாங்கள் தவெக அரசை எதிர்த்துப் போராடவில்லை; மக்கள் பிரச்சனைக்காகத்தான் போராடுகிறோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சுப்பராயன், "கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திருப்பூரில் குப்பை பிரச்சனை நிலவி வருகிறது. திருப்பூரில் நாளொன்றுக்கு ஏறத்தாழ 600 டன் வரை குப்பைகள் சேகரமாகிறது. தொழில் நகரமாக விளங்கும் திருப்பூரில் மேலும் குப்பை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது நீண்டகாலப் பிரச்சனையாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சரை வலியுறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே குப்பைக் கொட்டப்படும் பகுதியில் உள்ள மக்கள், சுகாதார சீர்கேடு பிரச்சனைகளைத் தெரிவித்தும், குப்பைக் கொட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராடும் மக்களை கைது செய்வது ஏற்க முடியாது. இதற்கு அறிவியல் பூர்வமான திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்த வேண்டும் என அனைத்துக் கட்சிகளின் நிர்வாகிகளும் கையெழுத்திட்டு முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

மக்களோடு எதிர்க்கட்சிகள் நிற்கின்றனர். போராடும் மக்களை போலீசார் கைது செய்வது அத்துமீறல். குழந்தைகள், பெண்களைக்கூட ஆண் காவலர்கள் இழுத்து கைது செய்வது தவறானது. போராடும் உரிமையை மறுப்பது சரியில்ல. இந்த செயலில் போலீசார் ஈடுபடக்கூடாது. சந்தேகத்திற்கு இடமில்லாமல் திடக்கழிவு மேலாண்மை தாமதம் செய்யப்பட்டுள்ளது.

திடக்கழிவு மேலாண்மையை செயல்படுத்தும் இடத்தில் மாநில அரசு தான் உள்ளது. நாங்கள் தவெக அரசை எதிர்த்துப் போராடவில்லை; மக்கள் பிரச்சனைக்காகத்தான் போராடுகிறோம். இதனை அரசியல் செய்யவில்லை. நீங்கள் எதிர்பார்க்கும் பதிலை நான் சொல்ல மாட்டேன். நாங்கள் தவெக அரசுடன் கூட்டணியில் இல்லை; ஆட்சிக்கு ஆதரவு மட்டுமே கொடுத்துள்ளோம்; தவறு நடந்தாலும் மக்கள் பிரச்சனைக்கும், நாங்கள் குரல் கொடுப்போம். திமுகவிற்கு அவர்களை காப்பாற்றிக் கொள்ள தெரியும். தவெக அரசை எதிர்ப்பது என்றால் நேரடியாக எதிர்ப்போம்; மறைமுகமாக மக்கள் போராட்டத்தின் மூலம் எதிர்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வின் போது திருப்பூர் மாவட்டக் குழுவைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: பணிக்குச் செல்லும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு கோரிய வழக்கு: அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை