சிறையில் இருந்து வந்த பிறகும் எனக்கு பல கெடுபிடிகள் விதிக்கப்பட்டன: உணர்ச்சி பொங்க பேசிய சசிகலா
ஜெயலலிதாவை தனது சொந்த அக்காவாக நினைத்ததாகவும், அவருடைய மறைவு மிகுந்த துக்கத்தை கொடுத்ததாகவும் சசிகலா தெரிவித்துள்ளார்.

Published : February 25, 2026 at 9:04 AM IST
ராமநாதபுரம்: ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட சசிகலா, சிறை சென்றது முதல் விடுதலையாகி வந்தும் தனக்கு விதிக்கப்பட்ட கெடுபிடிகள் வரை தான் சந்தித்த சிரமங்கள் குறித்து மக்களிடம் பகிர்ந்துகொண்டார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு, ‘களம் காண்போம் அம்மாவின் ஆட்சி அமைப்போம்’ என்ற பெயரில் ராமநாதபுரத்தில் சசிகலா பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். கமுதி கோட்டைமேடு பகுதியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சசிகலா கலந்துகொண்டு உரையாற்றினார்.
ஏற்கனவே இந்த கூட்டத்தில் வைத்து புதிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக தெரிவித்திருந்த அவர், நேற்று அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் உருவம் பதித்த புதிய கொடியை அறிமுகம் செய்தார். மேலும் புதிய கட்சியின் பெயரை விரைவில் அறிவிப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து ஜெயலலிதாவுடனான உறவு குறித்து பேசிய சசிகலா, "ஜெயலலிதாவுடன் நான் பழகியதை, அரசியல்வாதியுடன் பழகியதாக நினைக்கவில்லை. என் சொந்த அக்காவுடன் பழகியதாகவே நினைத்தேன். ஜெயலலிதா மறைந்த அன்றே அமைச்சர்கள் தன்னை பதவி ஏற்க சொன்னார்கள். ஆனால் அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இறந்ததை நினைத்து மிகுந்த துக்கத்தில் இருந்தததால், நான் அவ்வாறு செய்யவில்லை" எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், ஜெயலலிதா இறந்த சமயத்தில் கட்சி பதவியை ஏற்க வேண்டாம் என்று முதலில் நினைத்ததாகவும், பின்னர் அனைவரின் விருப்பத்தின்படியே பொதுச் செயலாளராக பதவி ஏற்றதாகவும் தெரிவித்தார்.
அதன் பிறகு கட்சிக்குள் நடைபெற்ற பிரச்சினைகள் குறித்து மக்களிடம் விளக்கினார். அப்போது, பன்னீர்செல்வத்தின் போக்கு சரியில்லை என அமைச்சர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்ததாகவும், ஆனால் எந்த காரணத்திற்காகவும் ஆட்சி கவிழ்ந்து விடக்கூடாது என்பதில் தான் கவனமாக இருந்ததாகவும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, பெங்களூரு செல்ல வேண்டிய சூழ்நிலை, சிறை வாழ்க்கையில் சந்தித்த சிரமங்கள், கணவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவங்கள் என அடுத்தடுத்து தான் சந்தித்த சிரமங்களை அவர் பகிர்ந்துகொண்டார். தான் சிறைக்கு சென்ற பிறகு கட்சிக்குள் நடைபெற்ற குளறுபடிகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் சசிகலா முன்வைத்தார்.
சிறையிலிருந்து விடுதலையாகி வந்த பின்னர், கட்சிக்கொடியை பயன்படுத்தக் கூடாது, அம்மா நினைவிடத்திற்கு செல்லக்கூடாது என்பது போன்ற பல கெடுபிடிகள் தனக்கு விதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இறுதியாக, திமுக என்னும் தீய சக்தியை விரட்டி அடிப்போம் என பொதுக்கூட்டத்தில் சசிகலா சபதம் எடுத்தார்.

