ETV Bharat / state

போதைப்பொருளை ஒழிக்க விழுப்புரம் எஸ்.பி. அதிரடி திட்டம் - மஃப்டியில் களமிறங்கிய போலீசார் ரகசிய வேட்டை

விழுப்புரம் பழைய நகராட்சி பூங்கா அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விழுப்புரம்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத்
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 7, 2026 at 12:39 PM IST

2 Min Read
Choose ETV Bharat

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள்கள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) சாய் பிரனீத் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தின் புதிய எஸ்.பி.யாகப் பொறுப்பேற்றுள்ள சாய் பிரனீத், சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு மற்றும் குற்றச் செயல்களைத் தடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில், மாவட்டத்தில் எந்த விதமான ஜாதி, மதம் மற்றும் அரசியல் சார்ந்த மோதல்களும் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்டத்தில் உள்ள 49 காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

முதற்கட்டமாக, மாவட்டத்தின் எதிர்காலத் தூண்களான இளைய சமூகத்தை போதைப் பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க எஸ்.பி. திட்டமிட்டுள்ளார். சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா, புகையிலை மற்றும் சிகரெட் போன்ற போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில் எஸ்.பி. உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் தலா 3 தனிப்பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சீருடை அணியாமல் (மஃப்டி), ரகசியமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.

மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு வரும் நேரம் முதல் மாலை வீடு திரும்பும் வரை அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்தல், வகுப்பு நேரங்களுக்கு இடையே மாணவர்கள் வெளியே சென்றால் அவர்கள் எங்குச் செல்கிறார்கள், யாரைச் சந்திக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்தல், கல்வி நிலையங்களுக்கு அருகே உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள்.

இதுகுறித்து தனிப்பிரிவு போலீசார் கூறுகையில், "மாணவர்களிடம் போதைப் பழக்கம் உருவாவதற்கு முக்கியக் காரணமே அதனை எளிதாகக் கிடைக்கச் செய்யும் விற்பனையாளர்கள் தான். எனவே, மாணவர்களுக்குப் போதைப்பொருட்களை விநியோகம் செய்யும் 'சப்ளையர்'கள் மற்றும் விற்பனையாளர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். போதைப்பொருள் சங்கிலியை உடைப்பதே எங்களின் முதன்மை நோக்கம்" எனத் தெரிவித்தனர்.

காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை விழுப்புரம் மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

போதைப்பொருள் விற்றதாக கைது செய்யப்பட்டஇளைஞர்
போதைப்பொருள் விற்றதாக கைது செய்யப்பட்டஇளைஞர் (ETV Bharat Tamil Nadu)

கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

இதனிடையே, விழுப்புரம் எஸ்பி உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்கள் சண்முகம், பிரபாகரன் ஆகியோர் விழுப்புரம் பழைய நகராட்சி பூங்கா அருகே நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை சோதனையிட்டபோது, அந்த நபரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

இதையும் படிங்க: நகைக்காக மூதாட்டி படுகொலை; மாட்டுக் கொட்டகையில் நடந்த பயங்கரம்

விசாரணையில் அவர், விழுப்புரம் அகரம்பேட்டை பகுதியைச் சேர்ந்த நிர்மல் குமார் (23) என்பதும், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 50 ரூபாய், 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் அவரை கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.