விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு- குற்றவாளி திங்கள்கிழமைக்குள் மேல்முறையீடு செய்ய உத்தரவு
தர்ம முனீஸ்வரன் தரப்பு மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யத் தவறினால், சட்ட உதவிகள் மையம் சார்பில் மனுத் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Published : July 7, 2026 at 7:26 PM IST
மதுரை: விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி தர்ம முனீஸ்வரன், திங்கள்கிழமைக்குள் மேல்முறையீடு செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி, கடந்த மார்ச் 10-ம் தேதி இரவு மாயமானார். மறுநாள் மாணவி, கிராமத்தின் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
| இதையும் படிங்க.. மீனாட்சி அம்மன் கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு புகார் - உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு |
தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என்று பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டறிய 10 தனிப்படைகளை அமைத்து தூத்துக்குடி மாவட்ட காவல் துறை உத்தரவிட்டிருந்தது.
சுமார் 461 நபர்களிடம் நேரடி மற்றும் டிஜிட்டல் முறையில் விசாரணை நடத்தப்பட்டு, 98 சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல் போன்ற அறிவியல் பூர்வ ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன.
போலீசாருக்கு கடும் சவாலாக அமைந்த இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக, சாயல்குடியை சேர்ந்த தர்ம முனீஸ்வரன் (30) என்பவரை போலீசார் கடந்த மார்ச் 19 ஆம் தேதி கைது செய்தனர்.
சாட்சிகள் அடிப்படையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதால், தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம், தர்ம முனீஸ்வரனுக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை உறுதி செய்யக்கோரி தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, பூர்ணிமா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, தர்ம முனீஸ்வரன், மதுரை மத்திய சிறையில் இருந்து காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, தர்ம முனீஸ்வரன் தரப்பில் மேல்முறையீட்டு வழக்கு விரைவில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
| இதையும் படிங்க.. தவெக எம்.எல்.ஏவிடம் குதிரை பேரம் பேசியதாக பதியப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு |
இதையடுத்து தர்ம முனீஸ்வரன் தரப்பு, வரும் திங்கட்கிழமைக்குள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யத் தவறினால், சட்ட உதவிகள் மையம் சார்பில் மனுத் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்படும் என்று கூறி, வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

