ETV Bharat / state

விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்த இளைஞர்களுக்கு நேர்ந்த துயரம்

விஜய்யின் காரை பின் தொடர்ந்தபோது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற கார் மீது மோதி இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. விபத்தில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.

விபத்தில் சிக்கிய இளைஞர்கள்
விபத்தில் சிக்கிய இளைஞர்கள் (Etv Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 4, 2026 at 4:31 PM IST

1 Min Read
Choose ETV Bharat

தஞ்சாவூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை தந்த விஜய்யைப் பார்ப்பதற்காக அவரது வாகனத்தைப் பின் தொடர்ந்த இரு இளைஞர்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இன்று (மார்ச் 04) காலை 11.00 மணியளவில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த அக்கட்சியின் தலைவர் விஜய், பின்னர் அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாகக் கூட்டம் நடைபெற்ற செங்கிப்பட்டிக்கு சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது, விஜய்யை எப்படியாவது காண வேண்டும் என்ற ஆவலில் திருச்சி கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் விக்னேஷ் (வயது 20) மற்றும் அவரது நண்பர் அருண் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் விஜய்யின் காரை பின் தொடர்ந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற கார் மீது மோதி இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.

இதையும் படிங்க: நான் வேண்டுமா? ஸ்டாலின் சார் வேண்டுமா? தஞ்சையில் விஜய் கேள்வி

விபத்தில் விக்னேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், சாலையில் இருந்தவர்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். எனினும் விக்னேஷின் உடல்நிலைக் கவலைக் கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

மற்றொருவரான அருணுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக, நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே, விபத்து நேரிட்ட இடத்தில் மற்றொரு இருசக்கர வாகனமும் விபத்துக்குள்ளானது. எனினும், வாகனத்தில் பயணித்த இருவர் காயங்களுடன் உயிர் தப்பினர்.

த.வெ.க. தலைவர் விஜய் தனது பயணத்தின் போது தனது வாகனத்தை யாரும் பின் தொடர வேண்டாம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் சூழ்நிலையில், இளைஞர்கள் விஜய் பங்கேற்கும் அனைத்து கூட்டங்களிலும் அவரின் வாகனத்தை பின்தொடர்ந்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.