ETV Bharat / state

அனுமதியின்றி வைத்த விஜய் கட்அவுட் அகற்றம்; ரூ.30 ஆயிரம் செலவு செய்ததாக தவெக தொண்டர் உருக்கம்

தலைவர் விஜய்க்கு என்னை போன்ற ரசிகர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு அன்பை வெளிப்படுத்துகிறோம். அனுமதி நடைமுறைகள் பற்றி முழுமையாக தெரியாமல் கட்டவுட் வைத்தது தவறு தான்.

அகற்றப்பட்ட  கட்அவுட் மற்றும் தவெக தொண்டர்
அகற்றப்பட்ட கட்அவுட் மற்றும் தவெக தொண்டர் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 9, 2026 at 10:49 PM IST

1 Min Read
Choose ETV Bharat

வேலூர்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விஜய் கட் அவுட் அதிரடியாக அகற்றப்பட்டது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பேனர்கள், கட் அவுட்கள் ஆகியவற்றை அகற்ற நகராட்சி ஆணையர் சுரேஷ் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து குடியாத்தம் காவல் துறையினரின் பாதுகாப்புடன் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த அரசியல் கட்சி பேனர்கள், கடைகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்கள் ஆகியவற்றை நகராட்சி ஊழியர்கள் அதிரடியாக அகற்றி வருகின்றனர்.

அந்த வகையில் குடியாத்தம், காமராஜர் பாலம் அருகில் நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தவெக தொண்டர் ஒருவர் வைத்திருந்த சுமார் 20 அடி உயரமுள்ள கட் அவுட்டை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். அப்போது அங்கு வந்த ஒரு தவெக தொண்டர், “சார் இந்த கட் அவுட்டை ரூ.30 ஆயிரம் செலவு செய்து ஆசையாக வைத்தேன். பொது இடத்தில் வைத்தால் பிரச்சனை வரும் என்று தெரியாது. வேறு ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் தான் வைத்தேன். இதற்கும் நகராட்சியில் அனுமதி வாங்க வேண்டும் என்று எனக்கு தெரியாது. தயவுசெய்து அதை எடுத்து செல்லாமல் என்னிடமே கொடுத்து விடுங்கள். நான் வீட்டுக்கு எடுத்துச் செல்கிறேன்” என்று நகராட்சி ஊழியர்களிடம் உருக்கமாக கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து நகராட்சி ஊழியர்கள், அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதன் பிறகு, தவெக தொண்டர்கள் உதவியுடன் அந்த கட் அவுட்டை பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றி கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

இது தொடர்பாக விஜய் ரசிகர் ஒருவர் கூறுகையில், “தலைவர் விஜய்க்கு என்னை போன்ற ரசிகர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு அன்பை வெளிப்படுத்துகிறோம். அனுமதி நடைமுறைகள் பற்றி முழுமையாக தெரியாமல் கட் அவுட் வைத்தது தவறுதான். ஆனால் ரூ.30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து வைத்த கட் அவுட்டை எடுத்துச் செல்ல அனுமதித்த நகராட்சி ஊழியர்களுக்கு நன்றி” என்று கூறினார்.

இதையும் படிங்க: விசிக இருக்கும் கூட்டணியில் பாமக? - மனம் திறந்த ராமதாஸ்

மேலும் ஒரு ரசிகர் கூறுகையில், “விஜய் படம் ரிலீஸ் என்றாலே ரசிகர்களுக்கு உற்சாகம் அதிகம். சட்டம், விதிமுறைகளை மதிக்க வேண்டியது அவசியம். இனிமேல் அனைவரும் நகராட்சி அனுமதி பெற்று முறையாக பேனர்கள், கட் அவுட்கள் வைக்க வேண்டும். தலைவரின் பெயரால் எந்த பிரச்சனையும் வரக்கூடாது” என்று கூறினார்.