ETV Bharat / state

போடி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை - கணக்கில் வராத சுமார் 2 லட்ச ரூபாய் பறிமுதல்

போடி நகராட்சி ஆணையாளர் திண்டுக்கல் மண்டல லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு நேரில் வந்து விளக்கம் கடிதம் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போடி நகராட்சி அலுவலகம்
போடி நகராட்சி அலுவலகம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 4, 2026 at 10:50 AM IST

1 Min Read
Choose ETV Bharat

தேனி: போடி நகராட்சி அலுவலகத்தில் 12 மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 91 ஆயிரம் ரூபாய் மற்றும் ஜிபே பரிவர்த்தனையில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் போடி நகராட்சி அலுவலகத்தில் நேற்று (ஜூலை 3) லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ராமேஸ்வரி தலைமையில் திடீர் சோதனை நடைபெற்றது. போடி நகராட்சி நகரமைப்பு பொறியாளர் மற்றும் நில அளவையர்கள் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

மாலை 4 மணியளவில் நகராட்சி அலுவலகத்துக்குள் நுழைந்த ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள், அலுவலக நுழைவாயில் மற்றும் வடக்கு, கிழக்கு பக்கங்களில் உள்ள நுழைவு வாயில்களை உடனடியாக அடைத்தனர். தொடர்ந்து, நகராட்சி ஆணையாளர் முஸ்தபா மற்றும் அலுவலர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

நேற்று மாலை 4 மணியளவில் தொடங்கிய சோதனையானது, இன்று (ஜூலை 4) அதிகாலை 4 மணி வரை நீடித்தது. சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் அதிகாரிகளிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின் முடிவில் 91 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் நகராட்சி அலுவலர்களின் ஜிபே பரிவர்த்தனையில் கணக்கில் வராத 1 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அனிதா ராதாகிருஷ்ணனை தவெகவில் இணைய வற்புறுத்தினோமா? - அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பதில்

போடி நகராட்சி அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணத்திற்காக நகராட்சி ஊழியர்களிடம் கையொப்பங்கள் பெறப்பட்டன. மேலும், போடி நகராட்சி ஆணையாளர் முஸ்தபாவிடம் திண்டுக்கல் மண்டல லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு நேரில் வந்து விளக்கம் கடிதம் அளித்துவிட்டு செல்லுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துவிட்டுச் சென்றனர்.

தொடரும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைகள்

தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்தால் லஞ்சம் அறவே ஒழிக்கப்படும் என்று விஜய் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். தற்போது தவெக ஆட்சியமைத்து கிட்டத்தட்ட 50 நாட்கள் ஆகியுள்ள நிலையில் கடந்த ஒரு மாத காலமாகவே தமிழகத்தில் பல்வேறு துறைகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனைகளை நடத்தி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, நிறைய அலுவலகங்களில் பல்வேறு ஆவணங்களும், கணக்கில் வராத பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையானது இனிவரும் நாட்களில் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று தவெக அமைச்சர்கள் கூறிவருகின்றனர்.