‘சாதி பெயரை சொல்லியே தாக்கினர்’ தென்காசி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர் பகீர் தகவல்
ஆலங்குளம் அருகே நெட்டூர் மற்றும் திருநெல்வேலியில் பொதுமக்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார், தனிப்படைகள் அமைத்து மூன்று சிறுவர்கள் உட்பட 12 பேரை கைது செய்துள்ளனர்

Published : June 2, 2026 at 1:38 PM IST
தென்காசி: தென்காசியில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் சாதி பெயரை சொல்லியே தாக்கியதாக பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவித்துள்ளார்.
ஆலங்குளம் அருகே நெட்டூர் கிராமத்தில் கடந்த 29ஆம் தேதி முகமூடி அணிந்த கும்பல் ஒன்று திருமண வீட்டில் புகுந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. மேலும் சாலையில் நின்றவர்களையும், அந்த கும்பல் தாக்கியது. இந்த சம்பவத்தில் ரமேஷ், அருள் மாறன், சந்தோஷ் குமார், ராம்குமார் உள்பட ஆறு பேர் காயமடைந்த நிலையில், அதே கும்பல் திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே தெற்குபட்டி கிராமத்தில் முபாரக், அப்துல் ரகுமான் ஆகிய இருவரையும் வெட்டியது.
இதுதொடர்பாக காவல்துறை சார்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மூன்று சிறுவர்கள் உட்பட 12 பேரை கைது செய்தனர். நெட்டூர் கிராமத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்களை குறிவைத்து அந்த கும்பல் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் நடந்த அன்று, பட்டியல் சமூக இளைஞர் ஒருவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், அதற்காக பேனர் வைத்தபோது மாற்று சமூகத்தைச் சேர்ந்த சிலர் தகராறு செய்துள்ளனர்.
அதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே தாக்குதல் நடைபெற்றதாக கூறப்பட்டது. இதுபோன்ற சூழ்நிலையில், தாக்குதலில் பாதிக்கப்பட்ட அருள்மாறன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தன்று நடந்தது குறித்து அவர் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், “அன்று 5 இருசக்கர வாகனங்களில் பத்து பேர் வந்தனர். இரண்டு பேர் மட்டும் முகத்தை மறைக்கவில்லை. மற்ற அனைவரும் முகத்தை மறைத்திருந்தனர்.
நாங்கள் வீட்டின் முன்பு பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென என்னை வெட்டினார்கள். எனது அலறல் சத்தம் கேட்டு அப்பா(ரமேஷ்) வந்தபோது அவரையும் வெட்டினார்கள். எங்கள் இருவரது அலறல் சத்தம் கேட்டு எனது அம்மா வந்தபோது அம்மாவையும் அந்த கும்பல் துரத்தியது. பிறகு திருமண வீட்டில் இருந்தவர்களையும் அரிவாளால் வெட்டினார்கள். திருமணத்திற்கு பேனர் வைத்தபோது ஒரு சிறுவன் வந்து தகராறு செய்தார். அவரிடம் நாங்கள் பேசி அனுப்பிவிட்டோம்.
| இதையும் படிங்க: ’திமுகவை குறை கூறாதீர்கள்; சரியாக ஆட்சி நடத்துங்கள்’: முதலமைச்சர் விஜய்க்கு கனிமொழி பதிலடி |
இதுதொடர்பாக போலீசார் சிறுவனை விசாரித்தனர். அந்த ஆத்திரத்தில் தான் ஆட்களை அழைத்துவந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கஞ்சா போதையில் இருந்த நிலையில், எங்களுடைய சாதி பெயரை சொல்லி தான் வெட்டினார்கள். எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் எந்த பிரச்சினைக்கும் செல்லவில்லை” என்றார்.

