உலகில் இறை சக்திக்கு மீறியது எதுவுமில்லை – குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்
ஸ்ரீபுரம் பொற்கோயில் பீடாதிபதியின் 50-வது பிறந்த நாள் விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Published : January 3, 2026 at 3:51 PM IST
வேலூர்: இறை சக்திக்கு மீறிய சக்தி இந்த உலகில் எதுவுமில்லை என குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
வேலூர் அருகே அமைந்துள்ள ஸ்ரீபுரம் பொற்கோயில் பீடாதிபதியின் 50-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் பொற்கோயிலுக்கு வருகை தந்தார்.
அப்போது பொற்கோயில் பீடாதிபதியின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், “இறை சக்திக்கு மீறிய சக்தி இந்த உலகில் எதுவும் இல்லை. கடந்த 2000 ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்மீக சக்தி, மனித வாழ்க்கையை வழி நடத்தி கொண்டே வருகிறது.
நான் கடந்த 25 ஆண்டுகளாக இங்கு வந்து செல்கிறேன். நான் மட்டுமல்லாமல் முன்னாள் குடியரசுத் தலைவர்கள் அப்துல் கலாம், ராம்நாத் கோவிந்த், தற்போதைய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோரும் இங்கு வந்து சென்றுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதலமைச்சராக இருந்த காலத்தில் வேலூர் பொற்கோயிலுக்கு வந்து சென்றுள்ளார். இது மிகச் சிறப்பானது” எனக் கூறினார்.
மேலும், “ஆன்மீக சக்தியை யாராலும், எந்நாளும் அழிக்க முடியாது. நாட்டிலேயே முழுக்க முழுக்க தங்கத்தால் ஆன கோயில்கள் இரண்டு மட்டுமே உள்ளன. ஒன்று அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் பொற்கோயில், மற்றொன்று வேலூரில் 100 ஏக்கர் பரப்பளவில் 1500 கிலோ தங்கத்தில் உருவாக்கப்பட்ட ஸ்ரீபுரம் பொற்கோயில்” என்றார்.
நிகழ்ச்சியின் முடிவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பசுவும், கன்றும் இணைந்து இருப்பதைப் போல பளிங்கு சிலை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
| இதையும் படிங்க: கோயிலில் தகாத வார்த்தை பேசுவதா? சேகர்பாபுவை பதவியில் இருந்து நீக்குங்க - தமிழசை செளந்தரராஜன் |
இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனின் வருகையை முன்னிட்டு வேலூர் விமான நிலையம், ஸ்ரீபுரம் பொற்கோயில் மற்றும் வேலூர் மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மொத்தமாக 1300-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

