சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிப்பு
மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

Published : March 2, 2026 at 10:47 PM IST
மதுரை: சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் வரும் 23ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படவுள்ளது.
கரோனா பெருந்தொற்று காலமான 2020 ஆம் ஆண்டு ஊரடங்கு சமயத்தில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணை என்கின்ற பெயரில் அழைத்து செல்லப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஜெயராஜ், பென்னிக்ஸ் இரட்டைக் கொலை சம்பவம் சிபிஐக்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை உடல் நலக்குறைவால் காலமானார். மீதம் உள்ள 9 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027 பக்கம் குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டமாக 400 பக்கம் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி முத்துக்குமரன் முன்பாக விசாரணை நடைபெற்றது. குற்றம் சாட்டப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதரிடம் நீதிபதி நேரடியாக கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து மற்ற குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் விசாரணை நடைபெற்று முடிவடைந்த நிலையில் வரும் 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.

