போலீஸை பார்த்ததும் பறந்த கார்: விடாமல் துரத்திச் சென்றால் 200 கிலோ குட்கா!
தமிழக – ஆந்திர எல்லையில் போலீசாரின் சோதனையில் நிற்காமல் சென்ற காரை மடக்கி பிடித்த போது, 200 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

Published : November 14, 2025 at 3:22 PM IST
வேலூர்: போலீசாரின் சோதனைக்கு ஒத்துழைக்காமல் தடுப்புகளை மீறி சென்ற காரை, சுமார் 15 கி.மீ. துரத்தி சென்று பிடித்ததில் 200 கிலோ குட்கா பொருட்கள் பிடிபட்டது.
வேலூரில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும், இரவு - பகலாக தீவிர கண்காணிப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வேலூருக்குள் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், வேலூர் காவல் எஸ்.பி. மயில்வாகனன் தலைமையிலான தனிப்படை போலீசார், தமிழக – ஆந்திர எல்லை பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில், பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி தமிழக – ஆந்திர எல்லை பகுதியில் கார் ஒன்று வேகமாக வந்தது. அதை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் நிற்குமாறு சைகை காட்டினர். ஆனால், கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து, போலீசார் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் அந்த காரை பின்தொடர்ந்து துரத்தி சென்றனர்.

தகவலறிந்த திருவலம் போலீசார், பொன்னை கூட்ரோட்டில் தடுப்புகள் அமைத்து காரை மடக்கி பிடித்தனர். பின் சம்பவ இடத்துக்கு ஐ.ஜி மற்றும் தனிப்படை போலீசார் விரைந்து வந்து காரை சோதனை செய்தனர். இதில், 200 கிலோ எடையிலான குட்கா பொட்டலங்கள் மறைத்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து, இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் பொன்னை பகுதியைச் சேர்ந்த சசி கணேஷ் (26), ஆனந்தராஜ் (25) என்பது தெரியவந்தது. தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட குட்கா திருவலம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தி வரப்பட்ட குட்கா எதற்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது? எங்கு வாங்கப்பட்டது? என்ற கோணங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

