ETV Bharat / state

நாங்கள் திமுக தோழர்களுடன் நட்போடு தான் இருக்கிறோம் - அமைச்சர் வன்னி அரசு

விசிக, இடதுசாரிகள் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி ஐந்து ஆண்டுகள் எந்த தடையும் இல்லாமல் செயல்படும் என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.

சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு
சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 12, 2026 at 5:40 PM IST

|

Updated : July 12, 2026 at 6:03 PM IST

2 Min Read
Choose ETV Bharat

தூத்துக்குடி: விடுதலைச் சிறுத்தைகள் யாருடனும் பகை பாராட்டாது, நாங்கள் திமுக தோழர்களுடன் நட்போடு தான் இருக்கிறோம் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "திமுகவுடனான நட்பு என்பது வேறு, அரசியல் நிலைப்பாடு என்பது வேறு. இரண்டுக்கும் சம்பந்தமில்லை என ஏற்கனவே திருமாவளவன் தெளிவாக கூறியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் யாருடனும் பகை பாராட்டாது. நாங்கள் திமுக தோழர்களுடன் நட்போடு தான் இருக்கிறோம். சமூக விரோத கருத்துக்கள், மக்களை பிரிக்கின்ற கொள்கைகளைக் கொண்டிருப்பதால் தான் பாஜகவை எதிர்க்கிறோம்.

திமுக, தவெக இணைய வேண்டும் என்பது பாஜக எதிர்ப்பு என்ற புள்ளியில் இருந்து தான் திருமாவளவன் கூறுகிறார். இந்தியாவின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்காகவே இண்டியா (Indian National Developmental Inclusive Alliance) கூட்டணியில் திமுக, தவெக ஒன்று சேர வேண்டும் என்று கூறுகிறோம். தவெகவை எதிர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் திமுக, அதிமுக இணைய வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறுகிறார். அதனை யாரும் ஏற்க மாட்டார்கள்.

அதிமுக வலிமை பெற வேண்டும் என்பதே விசிகவின் நிலைப்பாடு. தவெக அமைச்சரவையில் குற்றப்பின்னனி கொண்டவர்கள் யாரும் இல்லை. வழக்குகள் இருக்கலாம். அது அரசியல் ரீதியாக இருக்கலாம். என் மேல் கூட வழக்கு உள்ளது. வழக்கு பதிவு செய்தாலே குற்றவாளி என கூறிவிட முடியாது. நீதிமன்றத்தில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பிறகு தான் அதைப்பற்றி விவாதிக்க முடியும்.

விசிக, இடதுசாரிகள் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி ஐந்து ஆண்டுகள் எந்த தடையும், பிரச்சனையும் இல்லாமல் மக்களுக்கான ஆட்சியாக தொடரும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

ஆணவ படுகொலை தடுப்புச் சட்டம் தொடர்பாக திமுக ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு மேலும் ஒன்பது மாத கால அவகாசம் கேட்டுள்ளது. இந்த குழு கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஆணவ படுகொலைக்கான தனிச்சட்டம் விரைவில் அறிவிக்கப்படும். உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியா அல்லது தவெக கூட்டணியா என்பது குறித்து திருமாவளவன் உயர் கமிட்டி கூட்டத்தை கூட்டி அதில் முடிவெடுக்கப்படும்.

இதையும் படிங்க: புழல் அருகே ராட்சத இரும்புத் தகடு விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சமூக விடுதிகள் எங்கெல்லாம் தேவை இருக்கிறதோ? அதை கண்டறிந்து விடுதிகள் கட்டப்படும். இந்த கல்வி ஆண்டிலும் இடம் கிடைக்காதவர்களுக்கு கூட மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு இடங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மாநில உரிமைகளை பேசக் கூடிய கட்சிகளை முதலில் அழித்து ஒழிப்பதே பாஜக-வின் இலக்கு. பீகாரில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த நிதிஷ்குமார் கட்சி, சிவசேனா கட்சி என்ன நிலையில் இருக்கிறது? எல்லாவற்றையும் இரண்டாக, மூன்றாக உடைத்து சிதறடிப்பது தான் அவர்கள் வேலை. தமிழகத்தில் அதிமுகவை அப்படித்தான் அவர்கள் செய்துள்ளனர். பாஜக உடன் கூட்டணி வைத்த எந்த கட்சியும் உருப்பட்டதாக எந்த வரலாறும் இல்லை" என்றார்.

Last Updated : July 12, 2026 at 6:03 PM IST