தீபாவளி ஆஃபர் போல 'ஆட்சியில் பங்கு ஆஃபர்' கொடுக்கிறார் விஜய் - திருமாவளவன் விமர்சனம்
அரசியலில் விஜய் ஒரு பால்வாடி தலைவர். விசிக தொண்டர்களிடமிருந்து அவர் அரசியலை கற்றுக்கொள்ள வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Published : January 9, 2026 at 7:51 AM IST
திருவள்ளூர்: தீபாவளி, பொங்கலுக்கு ஆஃபர் கொடுப்பதுபோல், ஆட்சியில் பங்கு தருகிறோம் என ஆஃபர் கொடுத்து விஜய் காத்துக் கொண்டிருக்கிறார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
விசிக திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி மண்டல துணைச் செயலாளர் ஏகாம்பரத்தின் தாயார் அபூர்வம்மாள் படத்திறப்பு விழா சீத்தஞ்சேரில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு, தாயார் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இரங்கல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “திமுக கூட்டணியை எதிர்ப்பவர்கள் இன்னும் சிதறியே உள்ளனர். பாமக ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருந்தது. பாமகவுக்கு உள்ளேயே இன்னும் உட்கட்சி முரண் தீர்ந்த பாடில்லை. ஆனால், அதிமுக கூட்டணியில் பாமக வந்துவிட்டதாக அதிமுக மார்தட்டிக் கொள்கிறது. அதிகவுடன் கூட்டணியில் இருந்தவர்கள், மீண்டும் கூட்டணியில் இணைவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே கூட்டணியில் இருந்தவர்கள் தான் சேர்ந்துள்ளார்கள் தவிர, அதிமுக - பாஜக கூட்டணியில் புதிதாக எந்த ஒரு கட்சியும் சேரவில்லை.
அரசியலில் விஜய் ஒரு பால்வாடி தலைவர்
தீபாவளி, பொங்கலுக்கு ஆஃபர் கொடுப்பதுபோல், சட்டமன்ற தேர்தலுக்காக ஆட்சியில் பங்கு தருகிறோம் என ஆஃபர் கொடுக்கும் கட்சியாக விஜய் கட்சி உள்ளது. மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு உடைய நடிகர் விஜய் தனித்தே ஆட்சியை பிடிக்கும் என நம்பக்கூடியவர். ஆனால், அவர் தேர்தலுக்கு ஆஃபர் போட்டு காத்துக் கொண்டிருக்கிறார். அரசியலில் விஜய் ஒரு பால்வாடி தலைவர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்களிடமிருந்து அவர் அரசியலை கற்றுக்கொள்ள வேண்டும்” இவ்வாறு விமர்சனம் செய்தார்.
ஆதவ் அர்ஜூனாவை விமர்சித்த திருமாவளவன்
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், “35 வருடங்களாக ’அ’ போட சொல்லிக் கொடுத்து, அம்பேத்கர் அரசியலை சொல்லிக் கொடுத்து, கட்சி எப்படி செயல்பட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த திருமாவளவனை விட்டுவிட்டு, திடீரென சினிமாவில் பிரபலமாக இருக்கக்கூடிய ஒருவர் கட்சி ஆரம்பித்திருக்கிறார் என்றவுடன் அவருடன் செல்ல முடிவு செய்துள்ளார். உன் அனுபவம் அவருக்கு (விஜய்) கிடையாது. அவர் இப்போதுதான் பால்வாடி.
கட்சியில் பிஎச்டி முடித்துவிட்டு உன்னை ஆளாக்கி வைத்துள்ளேன். நீ ஒரு பால்வாடி பள்ளியில் இருக்கும் ஒருவர் எனக்கு தலைவர் என்று சொன்னால் ஏற்க முடியுமா? இத்தனை வருடங்கள் நீ படித்த படிப்புக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். நீ போய் அங்கு அரசியல் கற்றுத் தரவேண்டிய நிலை இருக்கிறது” என ஆதவ் அர்ஜூனாவை மறைமுகமாக விமர்சித்தார்.

