'நிதி இல்லாமல் பதவி எதற்கு?' மாநகராட்சிக் கூட்டத்துக்கு கறுப்பு உடையுடன் வந்த விசிக, பாஜக உறுப்பினர்கள்
வார்டு மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கப்படாததை கண்டித்து திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பாஜக, விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

Published : August 28, 2026 at 11:10 PM IST
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் தங்கள் வார்டு வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை எனக் கூறி பாஜக, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் மாமன்றக் கூட்டத்துக்கு கறுப்பு உடையுடன் வருகை தந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்று வருகிறது. தங்கள் வார்டுகளுக்கு மாநகராட்சி நிதி ஒதுக்காமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, விசிக கவுன்சிலர்கள் கறுப்பு உடையில் வந்திருந்தனர்.
அப்போது மன்றக் கூட்டத்தில் பேசிய பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த், "நிதி இல்லாமல் கூட்டத்தில் பங்கேற்பது பயனில்லாத ஒன்று. அதற்கு பதிலாக ராஜினாமா செய்து விட்டு வெளியே சென்று விடலாம். நாங்கள் ஒன்றும் எம்எல்ஏக்களை போல இன்னோவா கார் கேட்கவில்லை. மக்கள் பணி செய்ய நிதியை தான் கேட்கிறோம்.
| இதையும் படிங்க: சென்னை மாநகராட்சி பகுதிகளில் கழிவு கலந்த குடிநீர் விநியோகம்?- மாமன்ற கூட்டத்தில் மண்டலக் குழுத் தலைவர் ராஜன் பகிரங்க புகார் |
கவுன்சிலர்களுக்கு வளர்ச்சி நிதி மட்டுமல்ல. கடந்த 4 மாதங்களாக எந்த நிதியையும் அரசு வழங்கவில்லை. முதலமைச்சருக்கு புதிய அலுவலகம் கட்ட நிதி ஒதுக்குகிறார்கள். ஆனால், அடிமட்டத்தில் மக்களோடு மக்களாக இருக்கும் நமக்கு நிதி கொடுக்கவில்லை. பின்னர் எதற்காக இந்த கூட்டத்தை நடத்த வேண்டும்? இந்த விஷயத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்" என உமா ஆனந்த் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த மேயர் பிரியா, "திமுக ஆட்சியின் போது மாமன்ற கூட்டத்தில் 110 முதல் 120 தீர்மானங்கள் வரை நிறைவேற்றப்படும். ஆனால் இந்த ஆட்சி வந்த பிறகு 10 முதல் 11 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்படுகிறது. அதுவும் அத்தியாவசிய திட்டங்களுக்காக மட்டுமே தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்த 4 மாத கால ஆட்சியில் எந்த ஒரு புதிய திட்டத்தையும் செய்யவில்லை" எனக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய விசிக கவுன்சிலர் யாழினி, "திமுக ஆட்சிக்கு வந்திருந்தால் இந்த நிலைமை எங்களுக்கு வந்திருக்காது" என தெரிவித்தார். கடந்த திமுக ஆட்சியில் கட்சி பாகுபாடின்றி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது அதுபோல் இல்லை" என ஆதங்கம் தெரிவித்தார்.
அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் கூறுகையில், எந்த ஒரு திட்டத்தையும் செய்ய முடியாமல் போவதற்கு வார்டு கவுன்சிலர் பதவியே தேவையில்லை. ராஜினாமா செய்து விட்டு போகலாம். கான்டிராக்டர்களுடன் ஒப்பந்தம் போட்டு 7 மாதங்கள் ஆகிறது. இன்னும் பணியை தொடங்கவில்லை" என குற்றம்சாட்டினார்.
பின்னர் பேசிய திமுக உறுப்பினர் ராஜா அன்பழகன், "மாநகராட்சியில் 2 தொகுதிக்கு ஒரு அமைச்சர் என பொறுப்பாக போட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு எங்கே தண்ணீர் நிற்கும், எங்கு தண்ணீர் நிற்காது என்று கூட தெரியாது. முதலமைச்சர் தொகுதியிலேயே தண்ணீர் எங்கே நிற்கிறது என்று தெரியாது" என விமர்சித்தார்.
முன்னதாக, வார்டு மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கப்படாததை கண்டித்து திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பாஜக, விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

