கோயில் இடங்களில் குடியிருப்பவர்களுக்கு வாடகை குறைப்பு - முதலமைச்சருக்கு விசிக, கம்யூனிஸ்ட் நன்றி
ஆயிரக்கணக்கான கோயில் மனை குடியிருப்பு வாசிகள் இதனால் பயன் அடைந்துள்ளதாக சங்கங்கள் தெரிவிக்கின்றன.

Published : March 4, 2026 at 3:54 PM IST
சென்னை: அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் இடங்களில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு வாடகையை குறைப்பதற்காக முதலமைச்சருக்கு விசிக மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோயில் இடங்களில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு வாடகை தொகையை அரசு குறைத்துள்ளது. இதனை வரவேற்று, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் மற்றும் தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் சாமி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறை சொந்தமான திருக்கோயிலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குடியிருக்கின்றனர். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வாடகை பணம் உயர்த்தப்பட்டு மிகவும் சிரமப்பட்டோம். அது தொடர்பாக தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கைகளை ஏற்று தமிழக முதலமைச்சர் கோயில் மனையில் குடியிருக்கும் மக்களுக்கு வாடகையை 50% குறைத்தும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு 75 சதவிகிதமாக குறைத்தும் அரசாணை வெளியிட்டு இருக்கிறார். தொடர்ந்து திமுக அரசு அமையும் பொழுது மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றுவோம் என்று அவர் உறுதிமொழி அளித்துள்ளார். இதனால் தமிழக முதலமைச்சருக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும் எங்கள் சங்கங்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்'' என்றார்.
அதனை தொடர்ந்து பேசிய தமிழ்நாடு கோயில் மனையில் குடியிருப்போர் சங்க மாநில செயலாளர் பெரியசாமி, ''கடந்த 2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்த போது, கோயில் மனைகளில் குடியிருந்து வரும் சாமானிய மக்களுக்கு, சிறிய தொகை ஆண்டுக்கு ஒருமுறை வசூலிக்கப்பட்டது.
இதனை மாற்றி, 100 ரூபாய் செலுத்தி வந்த வாடகைதாரருக்கு ஆயிரம் ரூபாய் அதிகமாக வாடகையாக வசூலித்தனர். இதனால் கோயில் நிர்வாகத்தினருக்கும், குடியிருப்பவர்களுக்கும் இடையேயான உறவு சீர்கெட்டு நூற்றுக்கணக்கான வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் வந்தன. இந்த அமைதியற்ற நிலையை போக்கி, சுமூக தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு கோயில் மனைகள் குடியிருப்போர் சங்கம் சார்பில் தொடர்ந்து முதலமைச்சரை சந்தித்து முறையிட்டோம்.

முதலமைச்சரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், உயர் அதிகாரிகளும் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக பல்வேறு சுற்று பேச்சு வார்த்தைகள், கலந்தாய்வுகளை நடத்தி வாடகையை 50 சதவீதமாக குறைத்து இருக்கிறார்கள்.
விவசாயிகளுக்கு 75%, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் 75% குறைத்து உள்ளார்கள். குறைக்கப்பட்ட வாடகை 2016 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கக்கூடிய நிலையில், 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கூடுதலாக வாடகை செலுத்தி இருந்தால், அது ஈடுகட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மிகப்பெரிய வரலாற்று சிறப்புமிக்க அரசாணையாக அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கான கோயில் மனை குடியிருப்பு வாசிகளுக்கு நன்மை செய்ததற்காக முதலமைச்சருக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும் நன்றி கூற விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன், முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சண்முகம் உள்ளிட்டோர் வந்து முதலமைச்சரை சந்தித்து வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துள்ளனர்'' என்றார்.

