தூத்துக்குடி துறைமுகத்தில் உட்கட்டமைப்பு வசதி; துணை ஆணையத் தலைவர் தகவல்
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் நிலக்கரித்தளம் இரண்டில், முதன் முறையாக கச்சா பாமாயில் கப்பல் கையாண்டுள்ளது ஒரு மைல் கல் சாதனை என துறைமுக ஆணையத் தலைவர் சுஷாந்தகுமார் புரோகித் கூறியுள்ளார்.

Published : August 29, 2026 at 5:31 PM IST
தூத்துக்குடி: தொழில்களை விரிவுப்படுத்துவதற்காக தூத்துக்குடி துறைமுகத்தில் பல்வேறு உட்கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தூத்துக்குடி துறைமுக ஆணையத் தலைவர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் சேமிப்பு தொட்டிகளுடன் மாற்றி அமைக்கப்பட்ட நிலக்கரித்தளம் இரண்டில், முதன்முறையாக கச்சா பாமாயில் கப்பல் கையாளப்பட்டுள்ளது.
துறைமுக ஆணைய தலைவர் சுஷாந்தகுமார் புரோகித், துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தர்ராஜன் ஆகியோர் கச்சா பாமாயில் இறக்குமதியை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய துறைமுக ஆணைய தலைவர் சுஷாந்தகுமார் புரோகித், "மலேசியாவின் குணாக் துறைமுகத்திலிருந்து 143 மீட்டர் நீளம் கொண்ட 9.7 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட இந்தக் கப்பலில் 15,000 டன் கச்சா பாமாயில் கொண்டுவரப்பட்டது.

முதன்முறையாக இந்த தூத்துக்குடி துறைமுகத்தில், கச்சா பாமாயில் கப்பல் கையாளப்பட்டுள்ளது ஒரு மைல் கல் சாதனையாகும். இந்த பணிகள் அனைத்தும் இன்னும் மூன்று தினங்களில் முடிவடையும். பிரதமர் மோடியின் 'பிக்சட் பாரத் 2047' தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் தூத்துக்குடி துறைமுக உற்பத்தி தொழில்களை விரிவுபடுத்துவதற்காக பல்வேறு உட்கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மின் உற்பத்தி நிலையங்கள், ரசாயன தொழிற்சாலைகள், சேமிப்புக் கிடங்குகள், உணவு பதப்படுத்துதல், சமையல் எண்ணெய், பசுமை ஹைட்ரஜன் மற்றும் துறைமுக சார்ந்த தொழில்களை அமைப்பதற்காக 1,663 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.

