முதல்வர் ஸ்டாலின், வைகோ திடீர் சந்திப்பு - பேசியது என்ன?
காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் பெயரால் ஒரு பல்கலைக்கழகம் அமைப்பது குறித்து திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக வைகோ தெரிவித்துள்ளார்.

Published : February 28, 2026 at 6:12 PM IST
சென்னை: சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், வைகோ முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.
சென்னை தேனாம்பேட்டை உள்ள அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "முதலமைச்சரை சந்தித்து மூன்று கோரிக்கைகளை வைத்தேன். முதலாவதாக கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் பெயரால் ஒரு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். அதனை திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.
இரண்டவதாக வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளே உள்ளவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் கொடுப்பதைத் தடுப்பதற்காக மத்திய அரசு வஞ்சகமாக எடுக்கின்ற பல நடவடிக்கைகளுக்கு எப்படியோ ஒரு வகையில் உச்ச நீதிமன்றமும் உடன்பட்டுப் போகின்றது.
இச்சூழலில் சூரிய ஒளி மின்சாரம் மூலமாக வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு இலவச மின்சாரம் கொடுப்பதற்கு அரசு முடிவெடுத்துவிட்டால், இதை தடுக்கின்ற முயற்சிகளில் இருந்து நாம் விடுபட்டு விடலாம் என்பதை தேர்தல் அறிக்கையில் சேர்ப்பது சாலச் சிறந்ததாக இருக்கும். அதையும் தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதற்கு கோரிக்கையாக முதலமைச்சரிடம் வழங்கினேன்.
இந்த இரண்டு கோரிக்கைகளையும் தேர்தல் அறிக்கை தயாரிக்கின்ற குழுவிடம் உடனே தெரிவிப்பதாக முதலமைச்சர் கூறினார். மிக முக்கியமான மற்றொரு பிரச்சனை, பாஞ்சாலங்குறிச்சியில் வேந்தராக இருந்து, கயத்தாறில் புளியமரத்தில் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் முன்னோர்கள் 500 ஆண்டுகளுக்கு மேலாக அறுபடை வீடுகளில் ஒன்றாகிய திருச்செந்தூரில் கட்டபொம்மன் சத்திரம் அமைத்து, முருகன் கோயிலின் 9வது மண்டகப்படியாக பயன்படுத்தி வந்தனர்.
அவரது நேரடி வாரிசு வீமராஜா என்கிற ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்மதுரை. அவர் தமிழ்நாடு அரசிடமிருந்து உதவித் தொகை பெற்று வருகிறார். அவரது இரண்டு கால்களும் செயலிழந்து நடக்க முடியாமல் இருக்கின்ற இந்தச் சூழலில், சாதகமாக வாதாட வேண்டும் என்று பொய்யுரைத்து, அவரது கை ரேகையைப் பெற்று, மற்றொரு குடும்பத்தினர் இந்தச் சத்திரம் எங்களுக்குரியது என்று ஒரு பொய்யான முறையீட்டை தயார் செய்து அபகரித்துள்ளனர்.
இது தொடர்பாக கட்டபொம்மன் நேரடி வாரிசு வீமராஜா எனக்கு கடிதமும் அனுப்பி, அலைபேசி வழியாகவும் தெரிவித்தார். மேலும் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும் கேட்டுக் கொண்டார்கள்.
| இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி; மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை |
அதனைத் தொடர்ந்து நான் ஒரு முறையீட்டைத் தயார் செய்து முதலமைச்சரிடம் தெரிவித்தேன். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் இத்தகவலை கூறினீர்களா? என்று முதலமைச்சர் கேட்டார். இல்லை, உங்களிடம் தான் தெரிவிக்கிறேன் என்றேன். உடனடியாக தனது தனிச் செயலாளரை அழைத்து, அமைச்சர் சேகர்பாபுவிடம் உடனடியாகத் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுங்கச் சொல்லுங்கள். தொகுதி பங்கீடு குறித்து எதுவும் பேசவில்லை” என்றார். மல்லை சத்யா, திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தது பற்றி கேட்ட போது, அவரைப் பற்றி என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்” என்றார்.

