ETV Bharat / state

ஆளுநர் சர்வாதிகாரி போல் நடந்து கொள்கிறார் - வைகோ கண்டனம்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடியை போல முழுமையாக செய்தியாளர் சந்திப்புகளை தவிர்க்க கூடாது என வைகோ கூறியுள்ளார்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2026 at 2:56 PM IST

2 Min Read
Choose ETV Bharat

தஞ்சாவூர்: ஆளுநர் மாளிகையில் காவி வண்ணத்தில் திருவள்ளுவர் புகைப்படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், ஆளுநர் சர்வாதிகாரி போல் நடந்து கொள்வதாக வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில் மதிமுக நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு நிகழ்வில் பங்கேற்க வருகை தந்த வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”வரும் 2-ஆம் தேதி சென்னையில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கண்டித்து மதிமுக ஏற்பாட்டின் பேரில், பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாய அமைப்பினர் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து 5ஆம் தேதி தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் விவசாயிகளின் 3 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் மதிமுக சார்பில் நடைபெறுகிறது” என்றார்.

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது குறித்து பேசிய வைகோ, ”தமிழக ஆளுநர் மாளிகையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு காவியுடை அணிவித்துள்ள ஆளுநர் விஸ்வநாத் அல்லேக்கர், மிக மிக மோசமான நபர், திமிர் பிடித்து போய் சர்வாதிகாரி போல் நடந்து கொள்கிறார். இது மகா அயோக்கியத்தனம். அவரது செயலை திருத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், ஆளுநர் செல்லும் இடங்களில் மதிமுக சார்பில் கருப்புக் கொடி காட்டப்படும். உலகிலேயே பைபலுக்கு அடுத்து அதிக மொழியில் பெயர்க்கப்பட்ட நூல் உலகப் பொதுமறையான திருக்குறள். இது நாடுகளுக்கு, மன்னர்களுக்கு, நதிகளுக்கு, பகுதிகளுக்கு அப்பாற்பட்டது” என்றார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ (ETV Bharat Tamil Nadu)

மேலும் பேசுகையில், “மதிமுக தற்போது வரை திமுக கூட்டணியில் தோழமையோடு தொடர்கிறது. இனி வரும் உள்ளாட்சி அமைப்பு உள்ளிட்ட தேர்தல்களில் மதிமுக கூட்டணி நிலைப்பாடு குறித்து நிர்வாக குழு கூடி முடிவு செய்யும். தமிழ்நாட்டில் வன்முறை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்பது கடந்த ஆட்சிகளில் மட்டுமின்றி, தற்போதும் தொடர்ந்து வருகிறது. பாலியல் குற்றங்கள் அதிகரிப்பிற்கு மது மட்டுமல்லாது, போதை வஸ்துக்கள் அதிகரிப்பும் தான் காரணம்.

இதையும் படிங்க: சாதி, மதம், பணம் ஆகியவற்றைக் கடந்து தவெக வெற்றி - துரை வைகோ வரவேற்பு

இத்தகைய வழக்குகளில் பிணை என்பது வழங்க கூடாது, இதற்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்க வேண்டும். அந்த வகையில், தண்டனை சட்டத்தில் மத்திய அரசு உரிய திருத்தம் கொண்டு வர, தமிழ்நாடு அரசு அதுகுறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, மத்திய அரசிற்கு அனுப்பிட வேண்டும். அப்போது தான் இத்தகைய குற்றங்களை தடுக்கவும், குறைக்கவும் முடியும்” என்றார்.

முதலமைச்சர் விஜய் செய்தியாளர் சந்திக்காதது குறித்து பேசிய வைகோ, “தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடியை போல முழுமையாக செய்தியாளர் சந்திப்புகளை தவிர்க்க கூடாது. இதனை வேண்டுகோளாக நான் வைக்கிறேன். செய்தியாளர்கள் சந்திப்பின் போது தான் அரசியல் தட்பவெட்ப நிலையை நாம் அறிய முடியும்” என்று தெரிவித்தார்.