அமெரிக்கா-ஈரான் போர் எதிரொலி: வெறிச்சோடிய சென்னை விமான நிலையம்
சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல, குறைந்த அளவிலான பணிகள் மட்டுமே சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

Published : March 1, 2026 at 10:51 AM IST
சென்னை: இஸ்ரேல்- ஈரான் போர் எதிரொலியாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் சென்னை விமான நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.
இஸ்ரேல்- ஈரான் நாடுகள் இடையே போர் ஏற்பட்டு மத்திய கிழக்கு நாடுகள் இடையே பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் இருந்து துபாய், தோகா, அபுதாபி, பக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், ஏர் இந்தியா விமானம், எமிரேட்ஸ், எத்தியாட், கத்தார் ஏர்லைன் உள்ளிட்ட பல்வேறு விமான சேவைகள் அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் சென்னை விமான நிலையத்தில் நேற்று மாலையில் இருந்து இரவு வரை மத்திய கிழக்கு நாடுகளுக்கு புறப்படும் மற்றும் வருகை விமானங்கள் என சுமார் 30 விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மேலும் பலர் தங்களது விமான பயணத்தை ரத்து செய்துவிட்டு டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற முயற்சித்து வருக்கிறார்கள்.
மேலும் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் விமான பயணிகள் அனைவரும் தங்களுடைய விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு குறித்து அந்தந்த விமான நிறுவனங்களோடு தொடர்பு கொண்டு தகவல்களைக் கேட்டு அறிந்துகொண்டு அதற்கு தகுந்தார் போல் தங்களுடைய பயணத் திட்டங்களை வகுக்கும்படி சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்து ஈரான், அமெரிக்கா இடையே போர்பதற்றம் நிலவி வருவதால் பல்வேறு விமான நிறுவனங்கள் தங்கள் விமான சேவைகளை முற்றிலும் நிறுத்தி வைத்துள்ளது. இதுகுறித்து தகவலை அந்தந்த விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பிய நிலையில், இன்று காலை முதல் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை சர்வதேச விமான நிலையம் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல குறைந்த அளவிலான பணிகள் மட்டுமே சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர். மேலும் சில விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

