ETV Bharat / state

கடல் சார் வாணிகத்தில் உலகில் முதல் நாடாக இந்தியா மாறும்: மத்திய அமைச்சர் நம்பிக்கை

தூத்துக்குடியில் கடல் சார் மேம்பாட்டில் மைல் கல்லாக 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கப்பல் கட்டு தளம் அமைய உள்ளது.

மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் (கோப்புப்படம்)
மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் (கோப்புப்படம்) (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 23, 2026 at 7:48 PM IST

1 Min Read
Choose ETV Bharat

தூத்துக்குடி: கடல் சார் வாணிபத்தில் உலகில் முதல் நாடாக இந்தியாவை கொண்டு வருவதே பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கை என மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் புதிதாக செயல்படுத்தப்பட்டுள்ள வ.உ.சி கடல் சார் பாரம்பரிய அருங்காட்சியகம், செயற்கை நுண்ணறிவுடன் கூடிய துறைமுக மெய்நிகர் மாதிரி செயலி உள்ளிட்ட 9 திட்டங்களை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து துறைமுகத்தின் சமுதாய வளர்ச்சி திட்டத்தில் பல்வேறு அமைப்புகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், "நாட்டில் கடல் சார் வணிகம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. தமிழகத்தில் மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டில் நெடுஞ்சாலை, ரயில்வே, துறைமுகங்கள் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தூத்துக்குடி துறைமுகம் நாட்டில் முதல் பசுமை துறைமுகமாக உருவாக உள்ளது.

துறைமுகங்களை ரயில்வேயுடன் இணைக்கும் வகையில் ரயில்வே துறையில் அம்ரித் பாரத் மற்றும் சாகர்மாலா திட்டத்தில் பல பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 12,600 கோடி ரூபாய் செலவில் 111 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் ஜல்ஜீவன் மிஷன், பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம், பாரதப் பிரதமரின் கிசான் சமான் நிதி உதவி திட்டம் போன்றவற்றில் ஏராளமான மக்கள் பயன் பெற்று வருகின்றனர். தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தின் கொள்ளளவு மேம்படுத்தப்படும் வகையில் பல பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் முக்கியமாக வெளி துறைமுக வளர்ச்சி திட்டம் உட்பட 15,000 கோடி ரூபாய் மதிப்பில் பல திட்ட பணிகள் மேற்கொள்வதன் மூலமாக துறைமுகம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெறும்.

தற்போது தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் 35.97 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு வருகிறது. துறைமுகத்தின் ஆழம் 18 மீட்டராக அதிகரிக்கப்படும் போது துறைமுகத்தின் திறன் மேலும் அதிகரிக்கும். தூத்துக்குடியில் கடல் சார் மேம்பாட்டின் மேலும் ஒரு மைல்கல்லாக 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கப்பல் கட்டு தளம் அமைய உள்ளது.

மேலும், இத்துறைமுகத்தை பசுமை துறைமுகமாக மாற்றும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி, சோலார் மின் உற்பத்தி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து பசுமை எரிசக்தி திட்டங்களை செயல்படுத்துவதன் மூலமாக நாட்டில் வரும் 2070 ஆம் ஆண்டு ஜீரோ கார்பன் நாடாக இந்தியா உருவாகும். கடல் சார் வர்த்தகத்தில் உலக அளவில் முன்னணி நாடாக இந்தியாவை கொண்டு வர வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் கொள்கையாகும்" என தெரிவித்தார்.