ETV Bharat / state

இந்தியாவின் நட்பை விரும்பும் நாடுகளுடன் மட்டுமே நல்லுறவு: சென்னையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

தீவிரவாதிகளிடமிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதே நமது முதன்மையான கடமை. அது நமது உரிமையும் கூட. அதற்கு முரணாக செயல்படும் நாடுகளுடன் நட்பாக இருக்க முடியாது என ஜெய்சங்கர் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 2, 2026 at 5:05 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: இந்தியாவின் நட்பை விரும்பும் நாடுகளுடன் மட்டுமே நல்லுறவை பேண முடியும்; தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுடன் நல்லுறவை எதிர்பார்க்க முடியாது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

மெட்ராஸ் ஐஐடி கல்வி நிறுவனத்தை உலகின் முதல் பன்னாட்டு பல்கலைக்கழகமாக மாற்றும் வகையில், ஐஐடிஎம் உலகளாவிய ஆராய்ச்சி அறக்கட்டளை (IIT Madras Global Research Foundation) இன்று தொடங்கப்பட்டது.

மெட்ராஸ் ஐஐடி நிறுவனத்தின் கல்வி, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு ஆகியவற்றை உலக அரங்கிற்கு எடுத்து செல்வதற்கான உத்திசார்ந்த தளமாக 'ஐஐடிஎம் உலகளாவிய ஆராய்ச்சி அறக்கட்டளை' செயல்படும். மேலும், இந்த அறக்கட்டளையானது வெளிநாடுகளிலும் தங்கள் கிளைகளை தொடங்கும். தற்போது அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், துபாய், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வெளிநாடுகளில் உள்ள அறிவுசார் தொழில்நுட்பங்களை பெறக்கூடிய வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்நிலையில், சென்ன ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற வண்ணமயமான நிகழ்ச்சியில் இந்த அறக்கட்டளையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று தொடங்கி வைத்தார்.

இதன் ஒருபகுதியாக, ஐஐடி மாணவர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாணவர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பதில்களையும் இங்கு பார்க்கலாம்.

கேள்வி: வெளியுறவு கொள்கைகளை எதன் அடிப்படையில் தீர்மானிக்கிறீர்கள்?

ஜெய்சங்கர்: நான் இரண்டு நாட்களுக்கு முன்பு வங்கதேசம் சென்றிருந்தேன். இதை சற்று விரிவாக சொல்ல விரும்புகிறேன்.நமக்கு பல அண்டை நாடுகள் இருப்பது ஒரு வகையில் ஆசீர்வாதம்தான். நமக்கு தீங்கு விளைவிக்காத, நல்லுறவுடன் இருக்கும் அண்டை நாடுகள் இருந்தால், இயல்பாகவே அவற்றுடன் நமக்கு நெருக்கம் உருவாகும்.

அப்படிப்பட்ட அண்டை நாடுகளில்தான் இந்தியா முதலீடு செய்யும். அவர்களுக்கு உதவியும் செய்யும். கரோனா காலக்கட்டத்தில் நமது அண்டை நாடுகள் பலவற்றுக்கு முதல் தடுப்பூசி அனுப்பப்பட்டதே இந்தியாவிலிருந்துதான். உக்ரைன் போர் காரணமாக பல கட்டுப்பாடுகள் போடப்பட்ட போதிலும், அண்டை நாடுகளுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை இந்தியா தான் வழங்கியது.

இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியபோது, இந்தியா 4 பில்லியன் டாலர் நிதி வழங்கியது. இதுதான், நல்ல அண்டை நாட்டின் கடமை. இலங்கையில் புயல் தாக்கியபோது, அதே நாளில் இந்தியா அங்கு சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டது. இவை எல்லாம் நேர்மறையான உதாரணங்கள். ஆனால், சில அண்டை நாடுகள் தொடர்பாக நமக்கு ஏராளமான சிக்கல்களும் உள்ளன. தீவிரவாதிகளிடமிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதே நமது தலையாய கடமை. அது நமது உரிமையும் கூட.

மக்களை பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்கும். பல தசாப்தங்களாக தீவிரவாதம் நீடித்து வந்தால், அண்டை நாட்டுடன் நல்லுறவை பேண முடியாது. தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாட்டுடன் நல்லுறவு, நீர் பகிர்வு போன்றவற்றை எதிர்பார்க்க முடியாது.

வங்கதேசத்தில் நடைபெறவுள்ள தேர்தல் சிறப்பாக அமைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அங்கு நிலைமை சீரான பிறகு, அந்த நாட்டுடனான நல்லுறவு தொடரும் என நம்புகிறோம்.

கேள்வி: ஆப்கானிஸ்தான் உடனான இந்தியாவின் உறவு எப்படி உள்ளது?

ஜெய்சங்கர்: ஆப்கானிஸ்தான் உடனான இந்தியாவின நட்புறவு என்பது பல நூற்றாண்டுகள் பழமையானது. ஆனால், இன்றைய சூழலில் அந்த உறவில் பல சவால்கள் இருக்கின்றன. ஆப்கானிஸ்தான் தற்போது பல கடினமான சூழல்களை எதிர்கொண்டு வருகிறது. அங்குள்ள அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். எதிர்காலத்தில் நிலைமை மேம்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

கேள்வி: அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சீன குடியேற்ற அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பற்றிய உங்கள் கருத்து என்ன?

ஜெய்சங்கர்: அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த அந்த பெண், சீன குடியேற்ற அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டார். இந்த சம்பவம் குறித்து இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு அங்கம். எதிர்காலத்திலும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே அருணாச்சலப் பிரதேசம் இருக்கும். இதில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. அனைத்து நாடுகளும் சர்வதேச சட்டங்களையும், நடைமுறைகளையும் மதித்து நடக்க வேண்டும். இதுதான் இந்தியாவின் எதிர்பார்ப்பு.