ETV Bharat / state

திமுகவின் திட்டங்களில் 'வெற்றி' என ஸ்டிக்கர் - பட்ஜெட் குறித்து உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக பேசினேன். அதற்காக நேற்று என்னை வீடு புகுந்து கைது செய்தார்கள். பட்ஜெட்டுக்கான take diversion தான் இது.

உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு
உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 5, 2026 at 4:24 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: திமுக அரசின் திட்டங்களில் 'வெற்றி' என ஸ்டிக்கர் ஒட்டி புதியவை என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது என சட்டப்பேரவை எதிர்க்ககட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் தவெக கூட்டணி அரசின் முதல் பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று காலை தாக்கல் செய்தார். இன்றைய கூட்டம் நிறைவடைந்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், "இந்த அரசு அமைந்து கிட்டத்தட்ட நூறு நாட்கள் ஆகப் போகிறது. இந்த அரசின் செயல்பாடுகளை எடுத்துக் கொண்டால் அனைவரும் பூஜ்யம் என்று தான் கூறுவார்கள். இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டும் பூஜ்ஜியம் தான்.

திராவிட மாடல் ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதோ அதற்கு மேல் ஒரு ஸ்டிக்கர் ஒட்டி கொண்டிருக்கிறார்கள் தற்போதைய ஆட்சியாளர்கள்.

இவர்களின் ஆட்சியில் மாற்றம் என்னவென்றால் அனைத்திற்கும் ஸ்டிக்கர் ஒட்டுவது தான். பெயர் மாற்றுவது தான் மாற்றம். தாய் மாமன் திட்டம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மட்டும் தான் அளிக்கப்படும் என கூறுகிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

நாட்டிலேயே தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக இருக்கிறது என பெருமையாக கூறுகிறார்கள். அதற்கு திராவிட மாடல் ஆட்சியில் செய்த சாதனைகள் தான் காரணம் என்பதை நாங்கள் மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறோம்.

இதையும் படிங்க: தமிழக பட்ஜெட்- எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

அன்பு சோலை திட்டத்திற்கு முதியோர் பொழுதுபோக்கு என பெயர் மற்றும் செய்திருக்கிறார்கள். மடிக்கணினி திட்டத்திற்கும் பெயர் மாற்றம் செய்திருக்கிறார்கள். கலைஞர் கனவு இல்ல திட்டம், மாடர்ன் பள்ளி, முதல்வர் படைப்பகம் இதுபோன்று எங்கள் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்திருக்கிறார்கள்.

கல்வித்துறைக்கு முந்தைய ஆட்சியில் ரூ.48,500 கோடியை நாங்கள் ஒதுக்கீடு செய்திருந்தோம். ஆனால் தற்போது குறைவான நிதியே ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேகதாது குறித்து பேச ஆட்சியாளர்களுக்கு தைரியம் இல்லை. இந்த ஆட்சியில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக பேசினேன். அதற்காக நேற்று என்னை வீடு புகுந்து கைது செய்தார்கள். பட்ஜெட்டுக்கான take diversion தான் இது. கடந்த 100 நாட்களாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஐந்து வாரங்களில் 5 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த அரசு அமைந்த பிறகு தினந்தோறும் மின்தட்டுப்பாடு உள்ளது. மின் கட்டணமும் அதிகமாக வருகிறது, அமைச்சர்கள் பள்ளிகளுக்குள் சென்று கட்சியின் பெயரை கோஷம் போட சொல்லுகிறார்கள். அதனை ரீல்ஸ் ஆக எடுத்து வெளியிடுகிறார்கள். இந்தியாவே நீட்டுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது. அதனை இந்த அரசு எதிர்க்க மறுக்கிறது.

இதையும் படிங்க: தவெக கூட்டணி அரசின் முதல் பட்ஜெட்|2036-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு - மகளிர், மாணவர் மற்றும் இளைஞர் நலனுக்காக 8 புதிய மெகா திட்டங்கள்!

இதற்கு பதில் சொல்ல வேண்டிய முதலமைச்சர், எதுவும் பேச மறுக்கிறார். அதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் பதில் அளிக்கிறார் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

அனைத்து திட்டத்திற்கும் வெற்றி என கட்சி பெயரை வைத்துள்ளார்களே என்ற கேள்விக்கு, பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், "மாற்றம் மாற்றம் என்று கூறினார்கள். பழைய திட்டங்களுக்கு கட்சியின் பெயரை வைப்பதும் ஸ்டிக்கர் ஒட்டுவதும் தான் அவர்களின் மாற்றம்" என பதிலளித்தார்.