‘ஜனநாயகன்’ சென்சார் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவிய உதயநிதி ஸ்டாலின்
தனது தொகுதி மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கியது மகிழ்ச்சி அளிப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Published : January 8, 2026 at 3:34 PM IST
சென்னை: விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்பட சென்சார் விவகாரம் தொடர்பான கேள்விக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க மறுப்பு தெரிவித்து விலகிச் சென்றார்.
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொங்கல் பரிசாக ரூ.3000 மற்றும் பரிசு தொகுப்பினை அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று முதல் தமிழ்நாடு முழுவதுமுள்ள ரேஷன் கடைகளில் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3000 ரொக்கம் வழங்கும் பணி துவங்கி இருக்கிறது.
அதன்படி, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டை உலகப்பா மேஸ்திரி தெருவில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க நியாய விலைக்கடையில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகிய பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 பொங்கல் பரிசையும் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து பேசத் தொடங்கிய அவர், “பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அரிசி வாங்கும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பரிசுத்தொகையாக 3000 ரூபாயும், தரமான வேஷ்டி சேலை, கரும்பு மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
| இதையும் படிங்க: தொழில்நுட்பம் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்: UmagineTN-2026 உச்சி மாநாட்டில் முதல்வர் பேச்சு |
அந்த வகையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் 65,000 ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கின்றனர். இந்த தொகுதியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டன. முதல்கட்டமாக இன்று முதல் வருகிற 16ஆம் தேதி வரை அனைவருக்கும் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. எனது தொகுதியில் இந்த திட்டத்தை இன்று நான் துவங்கி வைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மக்கள் அனைவரும் வந்து மகிழ்ச்சியுடன் பரிசு தொகுப்பினை பெற்றுச் செல்கின்றனர்” என்றார்.

பின்னர் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாதது தொடர்பாக செய்தியாளர்கள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினர். ஆனால் அந்த கேள்விக்கு பதில் கூறாமல் அவர் உடனடியாக அங்கிருந்து விலகினார்.

