ETV Bharat / state

அரசு பெண் அதிகாரியிடம் 10 சவரன் சங்கிலி பறிப்பு... பைக்கில் எஸ்கேப் ஆன இளைஞர்களை மடக்கிய போலீஸ்

பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த அரசு பெண் அதிகாரியை, பைக்கில் பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் நகை பறித்துவிட்டு மாயமாகினர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள்
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 28, 2026 at 9:35 PM IST

1 Min Read
Choose ETV Bharat

வேலூர்: அரசு பெண் அதிகாரியிடம் 10 சவரன் தங்கச் சங்கிலி பறித்து மின்னல் வேகத்தில் மாயமான இருவரை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கைது செய்தனர்.

வேலூரை அடுத்த துத்திப்பட்டைச் சேர்ந்தவர் கமீலா மஞ்சுளா (வயது 54). இவர் வேலூரில் உள்ள அரசு பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

கடந்த 25-ம் தேதி மாலை வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு கமீலா மஞ்சுளா தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவர் சிவராமபுரம் பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் அவரை பின்தொடர்ந்துள்ளனர்.

அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் கமீலா மஞ்சுளாவின், கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து தப்பிச் சென்றனர். திடீரென நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கமீலா மஞ்சுளா, உடனடியாக இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கினர். குறிப்பாக, செயின் பறிப்பு நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். இதில், சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்களின் காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தன.

அதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் மற்றும் போலீசாரின் விசாரணையின் அடிப்படையில், செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் லத்தேரி அடுத்த குக்களப்பள்ளியைச் சேர்ந்த கிரிடரசன் (வயது 21) மற்றும் காட்பாடி அடுத்த எல்.ஜி புதூர் பகுதியைச் சேர்ந்த திவாகர் (வயது 19) என்பது தெரியவந்தது.

இதையும் படிங்க: ஆசிரியர் திட்டியதால் பள்ளி மாணவர் எடுத்த விபரீத முடிவு - விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்

இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து கமீலா மஞ்சுளாவிடம் பறிக்கப்பட்ட 10 பவுன் தங்கச் சங்கிலி முழுமையாக மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவர்கள் வேறு ஏதேனும் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் பெண் அதிகாரியிடம் துணிச்சலாக தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குறுகிய நேரத்திலேயே இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்து நகையை மீட்ட போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.