"போதையில் வயிற்றில் எட்டி உதைத்து, தகாத முறையில் நடந்து கொண்டனர்" - பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மது போதையில் இருந்த இளைஞர்கள் வயிற்றில் எட்டி உதைத்ததாகவும், ஆடையை கிழித்து தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் பாதிக்கப்பட்ட பழங்குடி பெண் வெளியிட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published : March 2, 2026 at 5:10 PM IST
திருநெல்வேலி: கணவரை பிரிந்து வாழும் பழங்குடியின பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் காணி சமுதாயத்தை சேர்ந்த ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கணவரை பிரிந்து வாழும் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்று (மார்ச் 1) மாலை பாபநாசத்தில் இருந்து மலை சாலையில் காணி குடியிருப்பு நோக்கி, இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரை பின் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த அதே சமுதாயத்தை சேர்ந்த தினேஷ் மற்றும் சுபின் என்ற இளைஞர்கள், திடீரென அந்தப் பெண்ணின் வாகனத்தை வழி மறித்துள்ளனர். பின்னர், அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றதாகவும், ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
அந்த தாக்குதலில் காயமடைந்த பெண், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த விக்கிரமசிங்கபுரம் காவல் துறையினர் தினேஷ், சுபின் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
| இதையும் படிங்க: தொழில் போட்டி காரணமாக மதுபான பார் மேலாளர் கொலை; அதிமுக நிர்வாகிக்கு போலீஸ் வலைவீச்சு |
இந்த நிலையில், கணவரை பிரிந்து வாழும் பழங்குடியின பெண் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் இருந்த படி பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ”சம்பந்தப்பட்ட இரண்டு இளைஞர்களும் என்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றனர். என்னை கடுமையாக தாக்கினர். ஆடையை பிடித்து இழுத்தனர். வயிற்றில் எட்டி உதைத்தனர். கழுத்தைப் பிடித்து நெறித்து தாக்கினர். அதில் ஒருவர் அதிக மது போதையில் இருந்தார்” என கண்ணீரோடு கூறியுள்ளார்.

