கனமழை, வனவிலங்குகளால் அச்சத்தில் உள்ள வால்பாறை அரசுப் பள்ளி மாணவர்கள்; பூட்டப்பட்டுள்ள பள்ளிகள் திறக்கப்படுமா?
தொடர்மழை மற்றும் வனவிலக்கு நடமாட்டம் காரணமாக மாணவர்களுக்கு பள்ளிக்கு வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Published : July 7, 2026 at 3:50 PM IST
கோயம்புத்தூர்: மாணவர்கள் பள்ளிக்கு வராததால் வால்பாறை பகுதியில் செயல்பட்டு வந்த இரண்டு அரசு பள்ளிகள் தகவலின்றி மூடப்பட்டுள்ளன. மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை புகழ்பெற்ற மலை வாசஸ்தலங்களில் ஒன்றாகும். இப்பகுதி பசுமையான தேயிலைத் தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள், வனப்பகுதி என மிக செழிப்பாக காட்சியளிக்கும். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் இப்பகுதியை சுற்றி சோலையார் அணை, நல்லமுடி பூஞ்சோலை, கூழாங்கல் ஆறு, ஆனைமலை புலிகள் காப்பகம் என பல்வேறு முக்கிய சுற்றுலா தலங்கள் உள்ளன.
மேலும், இப்பகுதியை சுற்றி பல்வேறு மலைக்கிராமங்கள் உள்ளன. பெரும்பாலான மலைக்கிராமங்களில் வசிப்பவர்கள் சுற்றியுள்ள தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களின் குழந்தைகள் கல்வி பயிலும் வகையில் வால்பாறை பகுதியில் ஆரம்பப் பள்ளி, அரசு துவக்கப் பள்ளி, அரசு நடுநிலைப் பள்ளி என 89-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்படுகின்றன.
இங்குள்ள மலைக்கிராமங்களில் உள்ள மாணவர்கள் கல்வி பெற இப்பள்ளிகளையே நாடி இருக்கின்றனர். இயற்கை சூழல் நிறைந்த இடமாக இருந்தாலும், அதில் இருக்கும் ஆபத்துகள் இங்குள்ள மாணவர்களின் கல்வியை தற்போது கானல் நீர் போன்று மாற்றியுள்ளது.
கடுமையான இயற்கை சூழ்நிலை, வனவிலங்குகளின் நடமாட்டம் இங்குள்ள மாணவர்களின் கல்வியை கேள்விக்குறியாக்கியுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பெற்றோர்களும் அவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்து வருகிறார்கள்.
வால்பாறை பகுதியில் செயல்படும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வரும் நிலையில், ரொட்டி கடை பகுதியில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளி மற்றும் சின்கோனா பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி ஆகியவை மாணவர்கள் யாரும் வராததால் கடந்த 2 நாட்களாக மூடப்பட்டுள்ள அவல நிலை உருவாகியுள்ளது.
பள்ளி வேலை நாளாக இருப்பினும், மாணவர்கள் பள்ளிக்கு வராததால், ஆசிரியர்களும் வந்து பள்ளியை திறக்கவில்லை. அப்பள்ளி ஆசிரியர்கள் எங்கே சென்றார்கள், பள்ளிக்கு விடுமுறை விடுக்கப்பட்டதா அல்லது பள்ளி நிரந்திரமாக மூடப்படுகிறதா என்ற எந்த தகவலுமின்றி உள்ளது.
| இதையும் படிங்க: சரக்கு வாகனத்துடன் 18 குட்கா மூட்டைகள் பறிமுதல்- இருவர் கைது |
மாணவர்கள் பள்ளிக்கு வராததற்கு காரணம் என்ன?
சின்கோனா என்பது எஸ்டேட் பகுதியாகும். இப்பகுதியில் அதிக கனமழை பெய்து வருகிறது. இதனால் மலைப் பாதைகளை கடந்து பள்ளிக்கு வரும் சூழல் இல்லை. அதே போன்று ரொட்டி கடை பகுதியில் அதிகளவில் சிறுத்தை, கரடி, காட்டு யானை ஆகியவற்றின் நடமாட்டம் உள்ளது. சிறுத்தை தாக்கிய சம்பவங்களும் இங்கு அரங்கேறியுள்ளன.
சமீபகாலமாக அவற்றின் நடமாட்டம் அதிகரித்ததால், பெற்றோர் அவர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டுகின்றனர்.
இதுகுறித்து எஸ்டேட் தொழிலாளர்கள் கூறுகையில், வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மேலும், காட்டு யானைகள் கூட்டம், கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டமும் அதிகளவில் உள்ளது.
பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மிகவும் முக்கியமாகும். குழந்தைகளின் நலன் கருதி, பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை உள்ளது” எனத் தெரிவித்தனர்.
மாணவர்கள் பள்ளிக்கு வராதது குறித்து ஆசிரியர்கள் தெரிவிக்கையில், ”தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்கள்.
பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா?
வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் இயற்கை சூழ்நிலை காரணத்தினாலும், வனவிலங்குகளின் பயத்தாலும் அங்குள்ள மாணவர்கள் அடிப்படை கல்வியை பெறுவது கூட சிரமம் என்ற நிலை உருவாகியுள்ளது. இங்கு வாழும் பெரும்பாலான மக்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களாகவும், வேறு மாநிலங்களில் இருந்து இங்கு வந்து வேலை செய்பவர்களாகவும் உள்ளனர். இங்குள்ள மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு, அவர்கள் அச்சமின்றி பள்ளிக்கு வந்து கல்வி பயில்வதை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.

