ETV Bharat / state

தவெக ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நடைபெறும் - அமைச்சர் விஸ்வநாதன் உறுதி

"2029 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி முன்னிறுத்தப்படுவார். அவர் பிரதமராவதற்கு நாங்கள் ஒற்றைக் குரலில் நிற்போம்" என்று அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி
திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 30, 2026 at 4:40 PM IST

2 Min Read
Choose ETV Bharat

திருச்சி: தமிழகத்தில் தவெக ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நடைபெறும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி 5 வருடம் நீடிக்காது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அமைச்சர், "தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் 5 ஆண்டுகள் நிச்சயமாக ஆட்சியை நடத்துவார். காங்கிரஸ் கட்சியின் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த அரசுக்கு முழுமையான ஆதரவை வழங்கி வருகிறோம். எனவே தவெக ஆட்சி ஐந்து ஆண்டுகள் மிகச் சிறப்பாக தொடரும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க.. அமைச்சர் வன்னி அரசை தவறாக விமர்சிப்பதில் அர்த்தமில்லை - திருமாவளவன் விளக்கம்

சட்டமன்றத்தில் மக்கள் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, "சட்டமன்றத்தில் மக்களின் பிரச்சனைகள் மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்வுகள் மட்டுமே அங்கே விவாதிக்கப்படுகின்றன. சட்டமன்றத்தின் மாண்புகளையும் மரபுகளையும் பேரவைத் தலைவர் மிகுந்த கண்ணியத்தோடு காப்பாற்றி வருகிறார்" என்று பதில் அளித்தார்.

கொள்கைக் குறிப்பில் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, "தவெகவின் கொள்கைத் தலைவர்களில் அம்பேத்கர், காமராஜர், தந்தை பெரியார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சிறு விஷயங்களை பெரிதாக்க வேண்டாம்" என்று அமைச்சர் விஸ்வநாதன் பதில் அளித்தார்.

உயர்கல்வித் துறையில் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்த கேள்விக்கு, "2001 முதல் 2006 வரை புறக்கணிக்கப்பட்ட ஏறத்தாழ 8,000 முதல் 9,000 உதவிப் பேராசிரியர்களின் கோரிக்கைகளுக்கு தவெக அரசு தீர்வு கண்டுள்ளது. இதற்காக மாதந்தோறும் 19 கோடி ரூபாயை தமிழக அரசு விடுவித்து, ஆண்டுதோறும் சுமார் 250 கோடி ரூபாய் பணிமூப்பு தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. பாலிடெக்னிக், பொறியியல், கலை-அறிவியல் பிரிவுகளுக்கு 25,000 முதல் 35,000 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. காலியாக உள்ள 8,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில், ஏற்கனவே 2,703 பேருக்கான ஆசிரியர் தேர்வு வாரிய (TRB) தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. மேலும் 6,000 பேராசிரியர்களுக்கான தேர்வு, மூன்று கட்டங்களாக நடத்தப்படும்.

இதையும் படிங்க... இந்தியாவில் இஸ்லாமியர்கள் இருக்கக்கூடாது என நினைப்பவர் இந்துவே அல்ல - மோகன் பகவத் காட்டம்

2029 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி முன்னிறுத்தப்படுவார். கடந்த 15 ஆண்டுகளாக மக்கள் வெறுப்பில் உள்ளனர். நரேந்திர மோடியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். 2029-இல் ராகுல் காந்திதான் பிரதமர். அவர் பிரதமராவதற்கு நாங்கள் ஒற்றைக் குரலில் நிற்போம்" என்று அமைச்சர் பதில் அளித்தார்.