ETV Bharat / state

தவெக தேர்தல் அறிக்கை - 12 பேர் குழுவை அறிவித்தார் விஜய்; செங்கோட்டையன் பெயர் இல்லை

தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவானது தமிழகம் முழுவதும் பயணித்து பொதுமக்களை சந்திக்கவுள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் (கோப்புப்படம்)
தவெக தலைவர் விஜய் (கோப்புப்படம்) (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 9, 2026 at 3:13 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தவெக தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக 12 பேர் கொண்ட குழுவை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதில் செங்கோட்டையன் பெயர் இல்லாதது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கிவிட்டதால் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

திமுக கூட்டணியை பொறுத்தவரை, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் என பழைய கூட்டணியே நீடித்து வருகிறது. அதிமுக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியி்ல் பாஜக, பாமக ஆகிய கட்சிகளும், ஒருசில சிறிய கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

புதிதாக களம் காணும் விஜய்யின் தவெக, தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. அதே சமயத்தில், கூட்டணிக்கு யாரேனும் வந்தால் சேர்த்துக் கொள்ளவும் தயாராக உள்ளது. வழக்கம்போல, சீமானின் நாம் தமிழர் தனித்து நிற்கவுள்ளது.

கூட்டணிகள் கிட்டத்தட்ட முடிவாகிவிட்டதால், தேர்தல் அறிக்கையை தயார் செய்யும் பணியில் பெரிய கட்சிகள் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, இரண்டு வாரங்களுக்கு முன்பே திமுக தேர்தல் அறிக்கையை தயார் செய்ய கனிமொழி எம்.பி. தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுவிட்டது.

இதையும் படிங்க: 'ஜனநாயகன்' படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு - உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்

இந்நிலையில், தற்போது தவெக தேர்தல் அறிக்கையை தயார் செய்ய 12 பேர் கொண்ட குழுவை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இந்த குழுவில் கே.ஜி.அருண்ராஜ், ஜேசிடி பிரபாகர், ஏ.ராஜ்மோகன், டிஎஸ்கே மயூரி, ஏ. சம்பத்குமார், எம்.அருள் பிரகாசம், ஆர். பரணிபாலாஜி, ஜே. முகமது பர்வேஸ், டி.கே. பிரபு, கிறிஸ்டி பிருத்வி, தேன்மொழி பிரசன்னா, எம். சத்யகுமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆனால், தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரான செங்கோட்டையன் இந்தக் குழுவில் இடம்பெறாதது பேசுபொருளாகியுள்ளது.

இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தவெக தேர்தல் அறிக்கை குழுவானது தமிழகம் முழுவதும் சென்று பொதுமக்கள், சிறு-குறு தொழில் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், விவசாய சங்கங்கள், மகளிர் அமைப்புகள், கல்வியாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்து அவர்களின் கருத்துகளையும், தரவுகளையும் பெறவுள்ளது.

அந்த தரவுகளின் அடிப்படையில், தமிழகத்தை வள்ர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அறிக்கையை தயார் செய்யவுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.