ETV Bharat / state

அனிதா ராதாகிருஷ்ணனை தவெகவில் இணைய வற்புறுத்தினோமா? - அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பதில்

அனைத்து துறைகளிலும் மாற்றம் காண இன்னும் 6 மாத காலம் பொறுத்திருக்குமாறு அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு
அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 4, 2026 at 9:34 AM IST

2 Min Read
Choose ETV Bharat

கோயம்புத்தூர்: அனிதா ராதாகிருஷ்ணன் ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேசியுள்ளார் எனவும், தவெகவில் இணைய யாரையும் வற்புறுத்தவில்லை எனவும் அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான கோபிசெட்டிபாளையம் செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த அமைச்சர் செங்கோட்டையன், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அவரிடம், தன்னை த.வெ.க-வில் இணைய அக்கட்சியினர் வற்புறுத்தியதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “அனிதா ராதாகிருஷ்ணன் ஏதோ பேச வேண்டும் என்பதற்காகப் பேசியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தில் இணையச் சொல்லி யார் அவரிடம் பேசினார்கள்? யார் வற்புறுத்தினார்கள்? என்பதை அவர் தெளிவாகச் சொன்னால் நன்றாக இருக்கும்” என்றார்.

அ.தி.மு.க விவகாரம் குறித்து கேட்டதற்கு, “கடந்த தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமி அனைத்தையும் கவனிக்க மறந்து விட்டார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் இந்த இயக்கத்தை மக்களுக்கான இயக்கமாக நடத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமியோ அதனை ஒரு கார்ப்பரேட் கம்பெனி போல நடத்தி வருகிறார். இதனாலேயே அக்கட்சியிலிருந்து நிர்வாகிகள் ஒருவர்பின் ஒருவராக ராஜினாமா செய்துவிட்டு வெளியேறி வருகிறார்கள்” என்றார்.

அப்படி அ.தி.மு.க-விலிருந்து வெளியேறுகிறவர்கள், த.வெ.க-வில் இணைகிறார்களே என்று கேட்டதற்கு, “நம்மை நம்பி வருபவர்களுக்கு எப்படி நம்பிக்கை ஊட்டுவது என்பது குறித்த இறுதி முடிவை த.வெ.க தலைவர் விஜய் தான் மேற்கொள்வார்” என்றார்.

ஆதவ் அர்ஜுனா குறித்து தி.மு.க விமர்சனம் செய்துள்ளதற்கு, “அவரே அதற்கு பதிலளிப்பார். ஜனநாயகத்தில் ஒவ்வொருவருக்கும் தங்களது கருத்துக்களை கூற முழு உரிமை உள்ளது” என்று கூறினார்.

முதலமைச்சர் கரூர் செல்வது குறித்த கேள்விக்கு, “தொடர் அலுவல் பணிகள், சட்டமன்ற கூட்டத்தொடர் மற்றும் துறை வாரியான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் கரூர் செல்லமுடியாத நிலை இருந்தது. முதலமைச்சர் எதற்காக அங்கு செல்கிறார்? அங்குள்ள மக்களுக்கு என்ன நன்மை செய்யப்போகிறார்? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்று பதிலளித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை - ரூ. 57 லட்சம் ரொக்கம் பறிமுதல்

தொடர்ந்து, தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமைய வேண்டும் என்பதை முதலமைச்சர் தான் முடிவு செய்வார் என்றும், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடவசதி எங்குள்ளது என்பது குறித்து தற்போது ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

அவரிடம், உதவிப் பேராசிரியர்கள், அரசு வழக்கறிஞர்கள் போன்ற பொறுப்புகளுக்குத் தவெகவைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவதாக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்தது குறித்துக் கேட்டதற்கு, “பா.ஜ.க-வைச் சேர்ந்த எத்தனை பேர் இதுபோன்ற பொறுப்புகளில் உள்ளனர் என்பது குறித்து முதலில் அவரிடமே கேளுங்கள். அந்த பட்டியலை அவர் பார்க்க வேண்டும்” என்றும் காட்டமாகப் பதிலளித்தார்.

மேலும், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் கட்டணக் கொள்கை குறித்து படிப்படியாக ஆய்வு செய்யப்பட்டு உரிய தீர்வு காணப்படும் என்றும், பல்கலைக்கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து ஆளுநருடன் இரண்டு, மூன்று முறை பேசப்பட்டுள்ளதால் இதற்கான தீர்வு விரைவில் எட்டப்படும் என்றும் உறுதியளித்தார்.

இறுதியாக, அனைத்துத் துறைகளிலும் மாற்றங்களைக் காண, இன்னும் 6 மாத காலம் பொறுத்திருக்குமாறு கேட்டுக்கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், ஒவ்வொரு துறையாக ஆராய்ந்து அதற்கான சீர்திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதிபட தெரிவித்தார்.