ETV Bharat / state

அரசு வழக்கறிஞர் நியமனங்கள் 100% நேர்மையாக நடைபெறுகின்றன - அமைச்சர் நிர்மல் குமார்

வழக்கறிஞர் பணி நியமனங்களில் பணம் வாங்கியதாகவோ, அமைச்சர்கள் அல்லது பிறரின் பெயரைப் பயன்படுத்தி யாராவது மோசடியில் ஈடுபட்டாலோ, பொதுமக்கள் உடனடியாக புகார் அளிக்கலாம் என்று அமைச்சர் நிர்மல்குமார் வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர் சந்திப்பு
அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர் சந்திப்பு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 7, 2026 at 12:26 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: அரசு வழக்கறிஞர் நியமனங்கள் 100% நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்று வருவதாகவும், பண வசூல், முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை எனவும் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்களுடைய பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளித்தார். அரசு வழக்கறிஞர் நியமனம் குறித்து வெளியாகிற வதந்திகள் பற்றி பேசுகையில், “தமிழ்நாடு முழுவதும் அரசு வழக்கறிஞர் பணியிடங்களுக்கு 5,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் அனைத்து ஆவணங்களும், தகுதிகளும் முறையாகச் சரிபார்க்கப்பட்டு, தகுதியானவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த முறை அரசு வழக்கறிஞர் நியமனங்கள் தகுதி அடிப்படையில் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறுகின்றன. மாவட்ட ஆட்சியர்களின் சரிபார்ப்பு மற்றும் அனைத்து நிர்வாக நடைமுறைகளும் முடிந்த பிறகே நேற்று மாலை முதல் அரசாணைகள் (GO) வெளியாக தொடங்கியுள்ளன. அதற்கு முன்பு எந்த நியமனமும் செய்யப்படவில்லை.

அதேபோல், தகுதியற்றவர்கள் நியமிக்கப்படாமல் இருக்க, தற்போது வழங்கப்படும் அனைத்து நியமனங்களும் ஆறு மாதங்களுக்கு தற்காலிகமாக வழங்கப்படுகின்றன. அதில் அவர்களின் செயல்பாடு, திறமை மற்றும் நீதிமன்றங்களில் அவர்கள் ஆற்றும் பணிகள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகே நிரந்தர நியமனம் வழங்கப்படும். மாநிலம் முழுவதும் இந்த முறையில் சுமார் 800 அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட உள்ளனர்” என்றார்.

திடீர் ஆய்வுகள்

தொடர்ந்து பேசிய அவர், இந்த பணி நியமனங்களில் பணம் வாங்கியதாகவோ, அமைச்சர்கள் அல்லது பிறரின் பெயரைப் பயன்படுத்தி யாராவது மோசடியில் ஈடுபட்டாலோ, பொதுமக்கள் உடனடியாக புகார் அளிக்கலாம் என்றும், புகார் வந்தவுடன் தயக்கமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் திடீரென மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளில் ஆய்வு நடத்துவது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு விளக்கமளித்த நிர்மல் குமார், “தேவையில்லாமல் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வுகள் நடத்தக்கூடாது என்று முதலமைச்சர் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளார்.

அதேசமயம், மக்கள் பிரதிநிதிகள் அல்லது அமைச்சர்கள் தங்களது சொந்த ஊர்களில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று எம்.எல்.ஏ. நிதி மூலம் தேவையான வசதிகளை ஏற்படுத்துவது தவறல்ல” என்றார்.

ஆளுநர் வரம்பு அறிந்து செயல்படுக

ஆளுநர் விவகாரம் குறித்து கேட்டதற்கு, “ஆளுநர் விவகாரம் குறித்து அரசின் நிலைப்பாடு ஏற்கனவே தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் அதிகாரங்களுக்கு அரசியலமைப்புச் சட்டப்படி சில வரம்புகள் இருக்கிறது. ஆளுநர் நேரில் சென்று ஆய்வு செய்வதால் எந்த நிர்வாகப் பலனும் கிடையாது. பொதுப்பணித்துறை அல்லது நீர்வளத்துறைக்கு உத்தரவிடவோ, ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளைச் செய்யக் கூறவோ, நிதி ஒதுக்கவோ அவரால் முடியாது” என்றார்.

இதையும் படிங்க: ரயிலை இயக்கிக்கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சு வலி - சாதுர்யமாக செயல்பட்டு வண்டியை நிறுத்திய லோகோ பைலட்

தொடர்ந்து, முதலமைச்சரின் கரூர் பயணத்தை தடுக்க திமுக தொடர்ந்து முயற்சித்து வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம்சாட்டினார். கடந்த முறை கரூருக்கு சென்றபோதும், பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்ததுடன், நிகழ்ச்சி நடைபெறவிருந்த இடங்களின் உரிமையாளர்களும் அழுத்தம் கொடுத்தனர். இப்போது அங்கு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டவுடன், அவருக்கு எதிரான மனுக்கள் தாக்கல் செய்கின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

சம்பவத்தில் காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்சி சார்பில் தலா ரூ.2 லட்சம் நிதி வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தாலும், அதை வழங்குவதற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தின் அனுமதி பெற்று அந்த நிதியை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.