ETV Bharat / state

"ஸ்டாலின் சாருக்கும் எனக்கும் இடையேயான போர் தான் இந்த தேர்தல்" - வேலூரில் விஜய் பிரகடனம்

முதல்வர் ஸ்டாலினுக்கு லஞ்சம், ஊழல், அரசியல் ஆதாயம் உள்ளவர்கள் தான் உண்மையான நண்பர்கள் என விஜய் கூறினார்.

வேலூர் கூட்டத்தில் ஆவேசமாக பேசும் தவெக தலைவர் விஜய்
வேலூர் கூட்டத்தில் ஆவேசமாக பேசிய தவெக தலைவர் விஜய் (TVK Youtube Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 23, 2026 at 1:55 PM IST

3 Min Read
Choose ETV Bharat

வேலூர்: எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தல் ஸ்டாலின் சாருக்கும் தமக்கும் இடையேயான போர் என்று தவெக தலைவர் விஜய் பகிரங்கமாக பிரகடனப்படுத்தி உள்ளார்.

தவெக நிர்வாகிகள் உடனான ஆலோசனை மற்றும் தேர்தல் பரப்புரை கூட்டம் வேலூரில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பேசினார். தமது தேர்தல் பரப்புரைகளில் ஆளும் திமுகவை விமர்சித்து பேசும் அதே பாணியை தான் வேலூரிலும் அவர் கடைபிடித்தார்.

குட்டிக் கதையுடன் தமது பேச்சை ஆரம்பித்த தவெக தலைவர் விஜய், "ஒரு ஊரின் நாலு ரோடு ஜங்ஷன் பகுதியில் முரட்டுக்காளை ஒன்று நிற்கிறது. பரபரப்பான அந்த சாலையின் நடுவே நின்று கொண்டிருந்த அந்த காளையின் பக்கத்தில் யாரும் போக முடியவில்லை. அந்த ஊரில் உள்ள ஒரு சில பேருக்கு மட்டும் தான் அந்த காளை அடங்கும். ஆனால் அவர்கள் ஊரில் இல்லை. அந்த நபர்களுடன் இருந்த பெரியவர்கள் சிலர் எங்களுக்கு இல்லாத அனுபவமா? என காளையை அடக்கச் செல்கின்றனர்.

ஆனால், அந்த காளை அவர்களை அருகில் கூட வர விட வில்லை. அப்போது ஒரு சிறுவன் என்ட்ரி தருகிறான். அவன் அதன் அருகில் செல்கிறான். அந்த காளை ஆக்ரோஷமாக் சீறி வந்த போது புல் கட்டுகளை எடுத்து நீட்டுகிறான். அந்த காளை அதனை பெற்றுக் கொண்டு அமைதியாக செல்கிறது. அப்போது அந்த சிறுவனிடம ஒரு பெரியவர் எப்படி காளை அமைதியாக சென்றது? என கேட்டார். அதற்கு அந்த சிறுவன் காளை பசியுடன் இருந்தது; அதனிடம் கோபம் இல்லை" என கூறினான்.

இந்த கதையில் வரும் முரட்டுக்காளை தான் தமிழக அரசியல் களம், அந்த சிறுவனிடம் கேட்ட பெரியவர் தான் மக்கள். ஸ்டைலா, கெத்தா வந்த சிறுவன் நான் இல்லை, நம்ம தவெக கட்சி என்று விஜய் கூறவே ஒட்டுமொத்த மைதானமும் கரகோஷத்தில் அதிர்ந்தது.

மக்கள் கடந்த தேர்தலில் சரியான தலைமை இல்லாமல் ஸ்டாலின் சார் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளால் அவருக்கு வாக்களித்தனர். அந்த நேரத்தில் வெகுஜன மக்கள் இயக்கமாக வந்ததுதான் தவெக. நாம் ஒவ்வொரு வீட்டிலும் உயிராகவும், உணர்வாகவும் இருக்கிறோம். எனக்கு மக்களை அவர்களது ஊருக்கு, வீட்டிற்கு சென்று சந்திக்க வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால் ஒரு எதிர்கட்சியாக இருந்து கேள்வி கேட்கும் இந்த நேரத்தில் நமக்கு எதிராக என்னென்ன சூழ்ச்சிகள் எல்லாம் நடக்கிறது என உங்களுக்கு தெரியும். தவெக ஆட்சி அமைந்தவுடன் கண்டிப்பாக ஒவ்வொரு கிராமத்திற்கும் வந்து மக்களை சந்திப்பேன்.

ஸ்டாலின் சாருக்கும் எனக்குமான போர்

இது தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் நடக்கும் தேர்தல் என முதலமைச்சர் ஸ்டாலின் மற்றொரு உருட்டு உருட்டுகிறார். இது என்ன நாடாளுமன்ற தேர்தலா? இது தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழல் சக்திகளுக்குமான போர், தமிழ்நாட்டு மக்களுக்கும் லஞ்சத்திற்குமான போர், இந்த விஜய்க்கும், ஸ்டாலின் சாருக்குமான போர், திமுக - தவெக இடையே நடக்கும் போர்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த திமுக அரசு சூப்பர் ஸ்டாண்ட் அப் காமெடி அரசு. இதுவரை நடைபெற்ற தேர்தல் வேறு, இந்த முறை நடக்கும் தேர்தல் வேறு. இம்முறை நடப்பது, 50 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் அதிசய தேர்தல். இந்த தேர்தலில் ஒட்டு மொத்தமாக மக்கள் என்னோடு நிற்கின்றனர். அந்த கடுப்பில் தான் என்னை எதிர்க்கின்றனர்.

உங்கள் (தமிழக மக்கள்) ஓட்டு விசில் சின்னத்திற்கு தான் என எல்லோருக்கும் தெரியும். இது எதிரிகளுக்கும் தெரியும், அதனால்தான் வேண்டுமென்றே எனக்கு எதிராக அவதூறு பரப்புகின்றனர். என்மேல் அவதூறு பரப்பினால் மக்கள் மீது அவதூறு பரப்புவதற்கு சமம். இந்த விஜயும், மக்களும் ரத்தமும், சதையும் மாதிரி. உடலும் உயிரும் மாதிரி, நம்மை பிரிக்கவே முடியாது” என உணர்ச்சி ததும்ப பேசினார்.

அரசியலுக்கு முன், அரசியலுக்கு பின்

தொடர்ந்து பேசிய விஜய், “நான் அரசியல்வாதிகளை பார்த்து கேள்வி எழுப்புகிறேன். நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பு உங்கள் சொத்து எவ்வளவு? அரசியலுக்கு வந்த பிறகு உங்கள் சொத்து எவ்வளவு? அவ்வாறு வந்த பணம் என்ன தொழில் செய்து வந்தது? உண்மையிலேயே உழைத்து சம்பாதித்த பணமா என்பதை வெளிப்படையாக கூற முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் கூட்டம் என்றாலே கடைசி நேரத்தில்தான் அனுமதி - நிர்மல்குமார் குற்றச்சாட்டு

கரூர் சம்பவத்தில் பழி ஏன்?

கரூர் சம்பவம் குறித்து பேசிய விஜய், “தமக்கு எதிரிகளே இல்லை, அனைவரும் நண்பர்கள் தான்' என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் கூறியிருந்தார். நாங்கள் உங்களுக்கு நண்பர்கள் என்றால், கரூர் சம்பவத்தில் என் மீது ஏன் பழி சுமத்தினீர்கள்? உங்களுக்கு மனசாட்சி உள்ளதா? எந்த கூட்டத்திற்கு அனுமதி கேட்டாலும் கொடுப்பதில்லை, உங்களுக்கு லஞ்சம், ஊழல், அரசியல் ஆதாயம் உள்ளவர்கள் தான் உண்மையான நண்பர்கள்” என்று ஆக்ரோஷமாக பேசிய விஜய், சில நொடிகள் கண் கலங்கி நின்றார்.

மேலும் பேசுகையில், "தீய சக்தியான திமுகவுக்கு எண்ட் கார்ட் போட வேண்டுமென்றால், நீங்கள் (வாக்காளர்கள்) ஒவ்வொருவரும் ஈவிஎம் மெஷினில் விசில் சின்னத்துக்கு எதிரே உள்ள பட்டனை ’பசக்... பசக்...’ என அழுத்துங்கள்” என்றார் விஜய் வேண்டுகோள் விடுத்தார்.

வாக்குறுதிகள்

தொடர்ந்து பேசிய அவர், "தவெக ஆட்சியில் பெண், ஆண் குழந்தைகள் பாதுகாப்பு நம்பர் 1 ஆக இருக்கும். சட்ட -ஒழுங்கு கடுமையாக இருக்கும். அரசுப் பள்ளிகள் முதல் தரமாக இருக்கும், அனைத்து கிராமங்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும். போட்டி தேர்வுகளை சந்திக்கும் வகையில் அரசுப் பள்ளி பாடத்திட்டம் தரமாக இருக்கும்.

உயர்நிலைப் பள்ளி பாடத்திட்டத்தில் அடிப்படை அரசியல் சாசனம் சேர்க்கப்படும். அரசுப் பள்ளிகளில் பெண்களுக்கு தரமான கழிவறை அமைக்கப்படும். போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு உருவாக்கப்படும். மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பிக்களில் சரிபாதி பெண்களாக இருக்கும்படி செய்வோம். மலை கிராமங்களில் சுகாதார நிலையங்கள் பிரசவம் பார்க்கும் வசதியுடன் அமைக்கப்படும்” என்று விஜய் பேசினார்.