அமலாக்கத் துறையை வைத்து பாஜக செய்ததை காவல் துறையை வைத்து தவெக செய்கிறது - திமுக குற்றச்சாட்டு
இந்தியாவிற்கு முன் மாதிரியாக இருந்த தமிழ்நாட்டு அரசியலின் மாண்பை சிதைத்து, ஒரு மோசமான அரசியலை தவெக அரசு முன்னெடுத்து வருவதாக பரந்தாமன் குற்றமஞ்சாட்டியுள்ளார்.

Published : July 4, 2026 at 7:06 PM IST
சென்னை: அமலாக்கத் துறையை வைத்து மிரட்டி பாஜக ஆள்சேர்ப்பது போல், காவல் துறையை வைத்து கட்சிக்கு ஆள் சேர்க்கும் வேலையை தவெக செய்கிறது என்று திமுக சட்டத் துறை இணைச் செயலாளர் பரந்தாமன் விமர்சித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் பரந்தாமன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "திமுக மீது குதிரைபேர குற்றச்சாட்டை சுமத்தி, மக்கள் மத்தியிலே திமுக மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற தவெக அரசின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததன் மூலம், முதல் முறையாக இந்த குதிரைபேர சர்க்கார் மூக்கறுக்கப்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வந்து 55 நாட்களைக் கடந்தும் நிர்வாகத்தைப் பற்றி கவலைப்படாத தவெக அரசு, தினந்தோறும் திமுக மீது எந்த குற்றச்சாட்டை சுமத்தலாம் என்று சிந்தித்து, அந்த வகையில்தான் அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஒரு அவதூறு வழக்கு தொடுத்துள்ளது.
| இதையும் படிங்க.. திமுக, அதிமுக செய்யாததை நாங்கள் ஒரு வருடத்தில் செய்து முடிப்போம் - அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் |
அவதூறு வழக்கில் கைது செய்ய வேண்டிய அவசியமே கிடையாது. முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட ஒரே காரணத்திற்காக அவசர அவசரமாக ஓடி வந்து அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறை கைது செய்தது. அதன் பின்னணி என்ன? ஒரு அவதூறு வழக்கில் கைதானவரை எதற்காக 6- 7 மணி நேரம் எதற்காக காவல் துறை விசாரணை செய்தது? அந்த விசாரணையின்போது, எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்யுங்கள்; தவெகவில் இணைய பணம் தருகிறோம் என கட்டாயப்படுத்தியதாக அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இதற்காகத்தான் 6 மணி நேரம் விசாரணை நடந்துள்ளதா?
பாஜக, அமலாக்கத் துறையை வைத்து மிரட்டி கட்சிக்கு ஆள் சேர்ப்பது போல், காவல் துறையை வைத்து மிரட்டி கட்சிக்கு ஆள் சேர்க்கும் வேலையை தவெக அரசு செய்கிறது. இந்த உண்மை வெளிப்பட்டவுடன் பதறிப்போய், சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் நேற்றிரவு 9 மணிக்கு பேட்டி கொடுக்கிறார். அந்த பேட்டியில் முறையான விளக்கம் கொடுத்தால் பரவாயில்லை. ஆனால், அவர் தனிநபரை அவதூறு செய்கிறார்; உருவக்கேலி செய்கிறார்; எங்கள் எம்எல்ஏவை ரௌடி என்கிறார்.
இப்படியெல்லாம் சொல்லும் நிர்மல் குமார் மீது உக்கரபாண்டியன் என்பவர் உசிலம்பட்டியில் நில மோசடி புகார் கொடுத்துள்ளார். எனவே, நிர்மல் குமார், திமுக எம்எல்ஏவை ரவுடி என்று சொல்ல எந்த அருகதையும் இல்லை.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கரூர் சம்பவத்தை குறிப்பிட்டு மக்களைக் கொன்று குவித்த கட்சி திமுக, கொன்று குவித்தவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்கிறார். இப்படி அவதூறா பேசும் ஆதவ் அர்ஜுனாவை கைது செய்யாமல் இன்னும் ஏன் காவல் துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது?
நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் மீது வீடு புகுந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த வழக்கு உள்ளது. அந்த வழக்கு தொடர்பாக புதுச்சேரி நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜராக சம்மன் அனுப்பட்டுள்ளது. அதேபோல மற்றொரு அமைச்சர் மேல் பவுடர் குற்றச்சாட்டு உள்ளது.
ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ மீது பாதிக்கப்பட்ட பெண் அளித்த குற்றச்சாட்டு இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் முதலமைச்சர் விஜய் மீது குதிரைபேர ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறோம். இப்படி கிரிமினல் பின்னணி கொண்ட, குற்றவாளிகள் நிரம்பிய அமைச்சரவையாக தவெக அமைச்சரவை இருக்கிறது. இப்படிபட்ட தவெக அரசு, திமுகவை பார்த்து கேள்வி கேட்க துளியும் அருகதை இல்லை.
நேற்று, விஜயபாஸ்கர் அமைச்சர் பதவி வாங்கித் தருவதாக பேரம் பேசினார் என்று அதிமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் கூறி இருக்கிறார். யார் இந்த குதிரை பேரத்தை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
சட்டமன்ற தேர்தலில் திமுக 59 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு எம்எல்ஏ, இரண்டு எம்எல்ஏவை விலைக்கு வாங்கி எப்படி ஆட்சி அமைக்க முடியும். இந்த அடிப்படை புரிதல்கூட இல்லாமல் தவெக அமைச்சர்கள் பேசுவது வடிகட்டியே பொய்.
தவெக ஆட்சிக்கு வந்து 56 நாட்காகின்றன. இதுவரை மக்களுக்கான வேலை என்ன செய்துள்ளது இந்த அரசு? குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க துப்பில்லை. சமூக வலைதளத்தில் அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் ஆர்ஜே.சரண் ஜெயராமன் போன்றவர்களை பொய் காரணம் சொல்லி கைது செய்கிறார்கள்.
திமுக மீது அவதூறுகளை பரப்பி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மேயர் பிரியா உள்ளிட்ட திமுக மகளிர் நிர்வாகிகளை கொச்சையாக பேசிவரும் தவெக ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தீர்களா?
மாற்றம் கொடுப்போம் என்று சொல்லிவிட்டு ஆட்சிக்கு வந்து அதிமுக கட்சியில இருப்பவரை தவெக கட்சியில சேர்க்கும் கட்சி மாற்றம் தான் நடந்துள்ளது. இன்னும் பலரை ராஜினாமா செய்ய வைத்து ஆளும் கட்சியில் இணைக்கும் முயற்சியில் தான் இந்த அரசு உள்ளது. இவற்றை எல்லாம் விட்டுவிட்டு வரும் திங்கள்கிழமையாவது மக்கள் பணியில் ஈடுபடுங்கள்.
இந்தியாவிற்கு முன் மாதிரியாக இருந்த தமிழ்நாட்டு அரசியலின் மாண்பை சிதைத்து, ஒரு மோசமான அரசியலை முன்னெடுத்து வருகிறது இந்த தவெக அரசு. ஒரு அரசியல் கட்சி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் தவெக" என்று அவர் கூறினார்.

