ETV Bharat / state

தவெக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது - எடப்பாடி பழனிசாமி

"விலை உயர்வை குறைக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினால், உணவுத் துறை அமைச்சரிடம் இருந்து சரியான பதில் வரவில்லை" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி- செய்தியாளர் சந்திப்பு
எடப்பாடி பழனிசாமி- செய்தியாளர் சந்திப்பு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 30, 2026 at 9:47 PM IST

2 Min Read
Choose ETV Bharat

வேலூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அதிமுக நகரச் செயலாளர் ஜிம் சங்கர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த அவர், வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட பெரிய வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஏதோ சம்பிரதாயத்துக்காக சில வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்கள்.

புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் 28,000 கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்கள். அதில் வருவாய் செலவு மட்டும் 25,000 கோடி. நிதி மேலாண்மையெல்லாம் சரி செய்ய ஒரு குழு அமைத்துள்ளார்கள். ஏற்கனவே இருந்த அரசும் ஒரு நிதி மேலாண்மை குழுவை அமைத்தது. அந்தக் குழு அமைத்த பிறகு 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கினார்கள். புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது. அப்படி நிலைத்தால் 20 லட்சம் கோடி ரூபாயாக கடன் உயர்ந்துவிடும்.

விலைவாசி உயர்வு

சர்க்கரை, அரிசி, பருப்பு, புளி, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து விட்டது. விலை உயர்வால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். விலை உயர்வை குறைக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று நான் கேள்வி எழுப்பினால், உணவுத் துறை அமைச்சரிடம் இருந்து சரியான பதில் வரவில்லை.

எம்எல்ஏக்களுக்கு கார்

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வாழங்குவது அரசின் விருப்பம். அந்த காரை இலவசமாக அரசு கொடுக்கவில்லை; பதவி இருக்கும் வரை மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம். நான் முதல்வராக இருந்தபோதும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் அரசு காரை பயன்படுத்தினேன். இப்போது என் சொந்த காரை பயன்படுத்துகிறேன்.

ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ்

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்டு வந்த இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது குறித்து முதலமைச்சர் விஜய்யிடம்தான் கேட்க வேண்டும். முதலமைச்சரிடம் திமுக தலைவர் கேட்க வேண்டும்.

சட்டமன்ற நேரலை

சட்டமன்ற நிகழ்வுகள் நேரலை செய்யப்படுவது தொடரலாம். நேரலையை மக்கள் பார்க்கட்டும். இதற்காக கடந்த ஆட்சியின்போது நாங்கள் நீதிமன்றம் வரை சென்றோம். தற்போதைய அரசு சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பு செய்கிறது. ஆனால் ஆளுங்கட்சி தரப்பு வாக்குவாதம் செய்யும்போது அதை நேரலையில் காண்பிப்பது கிடையாது. எதிர்த்தரப்பில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களைத்தான் காண்பிக்கிறார்கள்.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்கள் பிரச்சனையை பேசுகிறார்கள். அதற்கு தீர்வு காண வேண்டியது ஆளும் கட்சியின் கடமை. ஆனால், அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்துவது கிடையாது. ஏதாவது மக்களுடைய பிரச்சனையை எடுத்துச் சொன்னால் அதற்கு நேர்மாறாக பேசி அவையின் கவனத்தை திசை திருப்புகிறார்கள்" என்று தெரிவித்தார்.