'ஜனநாயகன்' திரைப்பட பிரச்சினை - பிள்ளையார்பட்டியில் 108 தேங்காய் உடைத்த புஸ்ஸி ஆனந்த்
'ஜனநாயகன்' திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் தொடர்பான தீர்ப்பு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

Published : January 9, 2026 at 8:57 AM IST
சிவகங்கை: ஜனநாயகன்' திரைப்படம் வெளியாக வேண்டி பிள்ளையார்பட்டியில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 108 தேங்காய்களை உடைத்து சிறப்பு தரிசனம் செய்தார்.
நடிகர் விஜயின் கடைசி படமான ‘ஜனநாயகன்' திரைப்படம் இன்று (ஜன.09) வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்துக்கான ‛சென்சார்' சான்று கிடைக்காததால் தேதி குறிப்பிடாமல் படம் வெளியாகும் தேதியை தயாரிப்பு நிறுவனம் தள்ளி வைத்துள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில், ஜனநாயகன்' திரைப்படத்துக்கான சென்சார் பிரச்சினை விலகி, விரைவில் வெற்றிகரமாக ரிலீசாக வேண்டி தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பிள்ளையார்பட்டியில் சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய விஜய் கட்சி ஆரம்பித்த நாளன்றே, ஜனநாயகன்' தனது கடைசி படம் என்றும், அதன் பிறகு முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்திருந்தார். அதன்படி, ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ’ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்றது. இதையடுத்து, படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், இதுவரை ஜனநாயகன் படத்துக்கான சென்சார் சான்று கிடைக்காததால், திரைப்படம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இதுதொடர்பான தீர்ப்பு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

புஸ்ஸி ஆனந்த் சிறப்பு வழிபாடு
இந்நிலையில், 'ஜனநாயகன்' திரைப்படம் மற்றும் அதன் போஸ்டர் வெளியீடு தொடர்பான விவகாரங்களில் சுமூகமான சூழல் நிலவ வேண்டும் என வேண்டி, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிள்ளையார்பட்டியில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலுக்கு வருகை தந்தார். முதலில் கற்பக விநாயகரை தரிசனம் செய்த அவர், தொடர்ந்து கோயிலின் ஸ்தல விருட்சமான மருத மரம் அருகே 'ஜனநாயகன்' படத்தின் போஸ்டரை வைத்து சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
மேலும், 108 தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினார். ஏற்கனவே கடந்த நவம்பர் 8 ஆம் தேதி கரூர் பிரச்சனை தொடர்பாக வழக்கு நிலுவையில் இருந்தபோது, புஸ்ஸி ஆனந்த் இதே பிள்ளையார்பட்டி கோயிலுக்கு வருகை தந்து வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

