ETV Bharat / state

வீட்டை விற்பதாக கூறி ரூ. 72 லட்சம் மோசடி; தவெக நிர்வாகி அதிரடி கைது

ராஜா உடன் தொடர்புடையவர்களிடம் கோபி விசாரித்தபோது, அவருக்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. மாறாக அவருக்கு ஏமாற்றமும், பகிரங்க மிரட்டல்களுமே கிடைத்துள்ளது.

கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகி ராஜா (எ) பவண்டோ ராஜா
கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகி ராஜா (எ) பவண்டோ ராஜா (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 3, 2026 at 10:48 PM IST

1 Min Read
Choose ETV Bharat

தூத்துக்குடி: வீட்டை விற்பதாகக் கூறி ரூ. 72 லட்சம் முன்பணமாகப் பெற்று மோசடி செய்த தவெக நிர்வாகி தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள பிச்சிவிளை கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவர், ஏரல் பகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நகர செயலாளராக உள்ள ராஜா (எ) பவண்டோ ராஜா என்பவருக்கு சொந்தமான வீட்டை ரூ. 90 லட்சத்திற்கு வாங்க ஒப்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதன்படி, கடந்த ஜனவரி 21 ஆம் தேதி இருவருக்கும் இடையே கிரைய ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், முன் பணமாக ரூ.72 லட்சம் தொகையை பவண்டோ ராஜா கேட்டுப் பெற்றுள்ளார். தனக்கு வங்கிக் கடன் இருப்பதாகவும், அதை அடைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதால், அவரது வங்கிக் கணக்கில் கோபி-யும் நேரடியாக பணத்தை செலுத்தியுள்ளார்.

மேலும், மீதமுள்ள ரூ.18 லட்சம் பணத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கியபின் வீட்டை அவரது பெயருக்கு பதிவு செய்து தருவதாகவும் ராஜா வார்த்தைகளால் உறுதியளித்து உள்ளார். ஆனால், ரூ. 72 லட்சம் பெற்ற பிறகு ராஜா மற்றும் அவரது மனைவி பொன்தெய்வம் இருவரும் கோபி உடனான தொடர்பை முற்றிலுமாக துண்டித்து தலைமறைவாகியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, ராஜா உடன் தொடர்புடையவர்களிடம் கோபி விசாரித்தபோது, அவருக்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. மாறாக அவருக்கு ஏமாற்றமும், பகிரங்க மிரட்டல்களுமே கிடைத்துள்ளது.

இதையடுத்து, பணத்தைப் பெற்றுக் கொண்டு இடத்தை பத்திரப்பதிவு செய்து கொடுக்காமல் ஏமாற்றிய தவெக நிர்வாகி ராஜா மீது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோபி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதில், மோசடி குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பது உறுதியானது.

இதையும் படிங்க: கோவை சிறுமி கொலை வழக்கு; கைதானவர்களை 3 நாள்கள் போலீஸ் காவலில் எடுக்க நீதிமன்றம் அனுநதி

இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், ராஜா மற்றும் அவரது மனைவி பொன்தெய்வம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ராஜாவை தற்போது போலீஸார் கைதும் செய்துள்ளனர். அவரிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருவது பொதுமக்களிடையே பேசுபொருளாக மாறி இருக்கிறது. சமீபத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இரண்டு தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.