வேளாண் பட்ஜெட்டில் தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெறும் - அமைச்சர் வினோத்
மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டக் கூடாது என்பதற்காக பாமக தலைவர் அன்புமணியின் நடைபயணம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் வினோத் பதிலளிக்காமல் சிரித்தபடி சென்றார்.

Published : July 4, 2026 at 3:55 PM IST
தஞ்சாவூர்: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெறும் என்று அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மகாமக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசின் விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி கோட்டாட்சியர் திருமலை தலைமையில் வட்டாட்சியர் பூங்குழலி முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உழவர் நலன் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் கலந்து கொண்டு ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான 44 வீட்டுமனை பட்டாக்களை பயனாளிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வினோத், "உங்களால் தான் நான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்; எப்போதுமே என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக கருதுங்கள், உங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்புக் கொள்ளுங்கள். உங்களுக்கு பணியாற்றுவதற்காக தான் நான் உள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வினோத், "தமிழ்நாடு வேளாண்மைத் துறையின் நிதிநிலை அறிக்கையில் தவெக அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள், வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் இடம்பெறும். குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தில் விடுபட்டு விவசாயிகளையும் இணைத்திட துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் சேஷம்பாடி கிராமத்தில் வழங்கிய விலையில்லா வீட்டுமனையில், மின் இணைப்பு கிடைக்கவில்லை என்ற கோரிக்கை கிடைக்கப் பெற்றுள்ளது. அது குறித்து விரைவில் மின்வாரிய அமைச்சர் மற்றும் துறை அலுவலர்களிடம் பேசி விரைந்து மின் இணைப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தலுக்கு முன்பு விஜய் தலைமையில் ஆட்சியமைந்தவுடன், பல ஆண்டுகளாக வீட்டுமனை இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என அறிவித்திருந்தோம். அதன்படி கடந்த 10 அல்லது 15 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா இல்லாமல் சிரமப்பட்டு வந்தவர்களில் முதற்கட்டமாக 2 மூன்றாம் பாலினத்தவர், 2 மாற்றுத்திறனாளிகள், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பெண், நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பில் இருந்தவர்கள் 6 பேர், ஆதி திராவிடர்கள் 27 பேர் மொத்தம் 44 பேருக்கு ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டக் கூடாது என்பதற்காக பாமக தலைவர் அன்புமணியின் நடைபயணம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் வினோத் பதிலளிக்காமல் சிரித்தபடி சென்றார்.

