தவெக தொண்டர்கள் மத்தியில் சற்று நேரத்தில் உரையாற்றுகிறார் விஜய்
தி.மு.க.வின் கோட்டையாக விளங்கும் தஞ்சையை த.வெ.க. கோட்டையாக விஜய் மாற்றுவாரா? என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

Published : March 4, 2026 at 11:16 AM IST
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இன்னும் சற்று நேரத்தில் தவெக நிர்வாகிகளை சந்தித்து அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றவுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாச்சாமிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. சுமார் 10 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள திடலில், சுமார் 4,900 பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை த.வெ.க.வின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். க்யூஆர் கோடு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், பல சோதனைக்கு பிறகே கூட்டத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனிடையே, தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சிக்கு வருகை தந்த த.வெ.க. தலைவர் விஜய்க்கு கட்சியின் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து சாலை மார்க்கமாகச் சென்ற விஜய்க்கு வழிநெடுகிலும் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்..
சேலம், வேலூரைத் தொடர்ந்து தஞ்சாவூரில் நிர்வாகிகளைச் சந்திக்கும் விஜய் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்தது தொடர்பாக விஜய் தனது நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி தொடங்கிய அன்று அண்ணன் விஜயகாந்த் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டும், புகழ்ந்தும் பேசிய விஜய், தற்போது தேமுதிகவை எப்படி எதிர்கொள்வார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது குறித்தும், தேர்தல் அறிக்கை தொடர்பாகவும் விஜய் இன்றைய கூட்டத்தில் அறிவிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கான அறிவிப்புகளையும் விஜய் வெளியிடவுள்ளதாக தெரிகிறது.

