பெரம்பூர் தொகுதி: 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் விஜய் பிரம்மாண்ட வெற்றி
திமுக வேட்பாளரும், பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவுமான ஆர்.டி. சேகருக்கும், தவெக தலைவர் விஜய்க்கும் இடையேதான் நேரடி போட்டி காணப்படுகிறது.

Published : May 4, 2026 at 7:26 AM IST
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ள நிலையில், அனைவரும் பெரிதும் எதிர்பார்த்த பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை விஐபி தொகுதிகள், நட்சத்திர தொகுதிகள் பல இருந்தாலும், பெரம்பூர் உள்ளிட்ட சில தொகுதிகளே அதிக அளவில் கவனத்தை ஈர்த்தன. தவெக தலைவர் விஜய் இங்கு போட்டியிட்டதே இதற்கு காரணம். இதனால் அது விஐபி தொகுதியாகவும், நட்சத்திர தொகுதியாகவும் மாறியது.
இங்கு விஜய்யை எதிர்த்து திமுக சார்பில் ஆர்.டி. சேகர் களமிறக்கப்பட்டார். இவர் ஏற்கனவே பெரம்பூர் எம்எல்ஏவாக பதவி வகித்தவர் என்பதால் திமுக வெற்றி பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதிமுக கூட்டணி சார்பில் பாமகவின் திலகபாமாவும் இங்கு போட்டியிட்டார்.
இந்நிலையில், இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, விஜய் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வந்தார். 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், முதல் முறை வாக்காளர்கள், பெண்கள் ஆகியோர் அதிகபடியாக விஜய்க்கு வாக்களித்ததாக தெரிகிறது.
இந்த சூழலில், 16வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் தவெக தலைவர் விஜய் 88,744 வாக்குகளை பெற்றிருந்தார். திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் 49,817 வாக்குளையும், பாமகவின் திலகபாமா 6,830 வாக்குகளையும் பெற்றிருந்தனர். அதன்படி, திமுக வேட்பாளரை கிட்டத்தட்ட 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் தோற்கடித்துள்ளார்.
பெரம்பூர் மட்டுமின்றி, தான் போட்டியிட்ட திருச்சி கிழக்கு தொகுதியிலும் விஜய் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் திமுக, அதிமுகவை ஓரங்கட்டி 105 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
பெரம்பூர் தொகுதி
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் மிகப்பெரிய தொகுதியாக பெரம்பூர் உள்ளது. இங்கு மொத்தமுள்ள 2 லட்சத்து 21 ஆயிரம் வாக்காளர்களில் கணிசமான சதவீதத்தினர் இந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர். இங்கு மொத்தம் 89.55 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இத்தொகுதயின் திமுக வேட்பாளராக ஆர்.டி. சேகர், 2019ஆம் ஆண்டு முதன்முதலில் பெரம்பூர் இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர். பிறகு 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் களமிறங்கிய ஆர்.டி. சேகர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தனபாலனை விட 54 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியை அதிமுக வேட்பாளர் வெற்றிச்செல்வன் கைப்பற்றினார். 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த சிபிஎம் சார்பில் களமிறக்கப்பட்ட செளந்தரராஜன் வெற்றி வாகை சூடினார்.
இவ்வாறு அடுத்தடுத்து திமுகவும், அதிமுகவும் கைப்பற்றி வந்த பெரம்பூர் தொகுதியில், இந்த முறை தவெக தலைவர் விஜய் இங்கு முன்னிலையில் இருக்கிறார். இது, திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

