நல்லகண்ணு மரணம் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு; தவெக தலைவர் விஜய் இரங்கல்
சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நல்லகண்ணுவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Published : February 25, 2026 at 4:27 PM IST
சென்னை: சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணுவின் இறப்புக்கு தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 101. மூச்சுத் திணறல் காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நல்லகண்ணு சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது உடல் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக ஒப்படைக்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நல்லகண்ணுவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட வீரரான நல்லகண்ணு விவசாயிகள் போராட்டம், தீண்டாமை எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு எளிய மக்களுக்கு ஆதரவாக நின்று களமாடியவர். அவரது மரணம் தமிழ்நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் பல அரசியல் கட்சி தலைவர்கள் நல்லகண்ணுவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தவெக தலைவர் விஜய் எக்ஸ் பதிவு
சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விவசாயிகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி, தோழர் நல்லகண்ணு காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன்.
அவரது இழப்பு, இந்த நாட்டிற்கும், கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த தோழர், நல்லகண்ணுவின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றேன்.
சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விவசாயிகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி, தோழர் அய்யா இரா.நல்லகண்ணு அவர்கள் காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன்.
— TVK Vijay (@TVKVijayHQ) February 25, 2026
அவரது இழப்பு, இந்த நாட்டிற்கும்…
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
நல்லகண்ணு மறைவு செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. தமிழகத்தில் மட்டுமல்லாது, அகில இந்திய அளவில் மிக மூத்த பொதுவுடைமைத் தலைவர். தனது 101 வயது வரை பொதுவாழ்வில் எளிமையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்து நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர். தனது 15 வயது தொடங்கி வாழ்நாள் முழுவதும் ஏழை, எளிய மக்கள், உழைக்கும் தொழிலாளர்கள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், பட்டியலின சமூகத்தினர் என அனைவரது உரிமைக்காகவும், உயர்வுக்காகவும் அயராது போராடி வெற்றி கண்டவர். சுற்றுச்சூழலை மாசுபடுத்திய ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காகவும், தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையை தடுப்பதற்காகவும் களப் போராட்டத்தில் மட்டுமின்றி, நீதிமன்றத்திலும் போராடி வெற்றி கண்டவர். சுதந்திர இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடுகள், வன்கொடுமைகள், ஆணவக் கொலைகள் ஆகியவற்றை எதிர்த்து தனது இறுதி மூச்சுவரை போராடிய நல்லகண்ணு மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பாகும்.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்
சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது. வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக போராடிய அவரது சேவை என்றும் நினைவுகூரப்படும். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன். குடும்பத்தினர் மற்றும் தோழமைகளுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
நாம் தமிழர் சீமான்
ஒரு மாபெரும் தலைவர், மகத்தான தலைவரை நாடு இழந்திருக்கிறது. அடக்குமுறை எல்லாவற்றையும் கடந்து இந்த தலைமுறையும் போராட்டத்தில் ஈடுபடுத்தியவர் நல்லகண்ணு. எவராலும் குறை சொல்ல முடியாத நபர். 100 ஆண்டுகால வரலாறு.
தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா
'பொதுவாழ்வில் நேர்மை' என்பதற்கு தோழர் நல்லகண்ணு என்றே தமிழக அரசியல் களத்தில் பொருள்! அந்தளவுக்கு தன்னலமற்ற, போராட்டங்கள் சூழ்ந்த, தியாகங்கள் மிகுந்த பொது வாழ்வை வாழ்ந்துகாட்டியவர் அவர்! கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத அவருடைய தியாகப் பெருவாழ்வு, பொதுவாழ்வில் இருக்கும் அனைவருக்கும் நிகழ்காலப் பாடங்கள்!
தோழர் நல்லகண்ணுவின் இழப்பு தமிழக அரசியல் களத்திற்கு மட்டுமல்ல, இந்தியப் பொதுவுடமை அரசியல் களத்திற்கும், சமத்துவத்தைக் கனவு காணும் ஒவ்வொரு பட்டாளித் தோழனுக்கும் பேரிழப்பு! அவரை இழந்து வாடும் பொதுவுடமை இயக்கத் தோழர்களுடனும், அவருடைய குடும்பத்தினருடனும் என் ஆழ்ந்த வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.
பொதுவாழ்வில் எவராலும் அழிக்க முடியாத தியாகத்தின் தடங்களை ஆழமாகப் பதித்துச் சென்றுள்ள பாட்டாளிகளின் தோழர் நல்லகண்ணுவிற்கு என் வீரவணக்கத்தை சமர்ப்பிக்கிறேன்!'' என தெரிவித்துள்ளார்.
சிபிஐ(எம்) மாநில செயலாளர் பெ.சண்முகம்
நல்லக்கண்ணு மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும், உழைப்பாளி மக்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது செவ்வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது. அவரது மறைவால் துயருற்றுள்ள குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவருக்கு தமிழ்நாடு முழுவதும் செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்தும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சிக் கொடிகளை மூன்று நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்க விட வேண்டுமென கட்சி அணிகளை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
விசிக தலைவர் திருமாவளவன்
தோழர் நல்லகண்ணு பொது வாழ்க்கையில் நேர்மைக்கான அடையாளமாக சமகாலத்தில் வாழ்ந்து காட்டியவர். நான் 30 ஆண்டு காலம் அவருடன் கைகோர்த்து பயணித்திருக்கிறேன். இளைய தலைமுறைக்கு ஒரு மகத்தான சான்றாக வாழ்ந்து காட்டிய பெருமைக்குரியவர். அவரால் இன்று அரசியல் களத்தில் ஏற்பட்டிருக்கிற வெற்றிடத்தை காலத்தாலும் நிரப்ப இயலாது. மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் வேண்டுகோள் வைக்கிறேன்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
தோழர் நல்லகண்ணு நம்மை விட்டு பிரிந்ததை நம்ப முடியவில்லை. அவர் எப்போதும் அடித்தட்டு மக்கள் மீது அக்கறை கொண்டவராக இருந்தார். நாம் வாழ்ந்த காலத்தில் இப்படி ஒரு எடுத்துக்காட்டான தலைவரும் வாழ்ந்து உள்ளார். அவருக்கு சொந்த வீடு கூட கிடையாது. அவரது மறைவு நம்மை மிக பெரிய துயரத்திற்கு கொண்டு சென்று உள்ளது. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கக்கோரி நிச்சயமாக டெல்லி தலைமையிடம் பேசுவோம்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
தோழர் நல்லகண்ணு கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்தாலும் அனைத்து மக்களிடமும், கட்சியினரிடமும் அனுசரித்து சென்றவர். அரசு நிதி வழங்கினாலும் அதனை கட்சிக்கே வழங்க கூடிய நபர். பாஜக சார்பாக அவருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.'' என்றார்.
| இதையும் படிங்க: இறுதி மூச்சு வரை மக்களுக்காக வாழ்ந்த மகத்தான தலைவர் நல்லகண்ணு! |

