ETV Bharat / state

கொங்கு மண்டலத்தை மொத்தமா கைப்பற்றனும்... செங்கோட்டையனுக்கு 'அசைன்மென்ட்'

எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் நாளை விஜய் இடம்பெறுவர் என்று தவெகவின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : December 15, 2025 at 8:49 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஈரோடு: கொங்கு மண்டலத்தில் 50 முதல் 60 தொகுதிகள் வரை வெற்றி பெற செய்வது உங்களுடைய பொறுப்பு என்று செங்கோட்டையனை புஸ்ஸி ஆனந்த் கேட்டுக் கொண்டார்.

ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் சுங்கச்சாவடி சரளை பகுதியில் வரும் 18-ம் தேதி தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் காலை 11 மணி முதல் 1 மணி வரையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், காவல் துறை விதித்த கட்டுப்பாடுகளை பூர்த்தி செய்வதற்காக, கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டமானது இன்று நடைபெற்றது.

ஈரோடு, வேப்பம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டம், கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் செங்கோட்டையனுக்கு கட்சியின் கொடி நிறத்தில் ஆள் உயர மாலை அணிவித்து வீரவாள் பரிசாக அளித்தனர். இதே போன்று கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்துக்கும் வீரவாள் பரிசாக அளிக்கப்பட்டது. தலைக்கு கிரீடம் வைக்க கட்சியினர் கேட்ட போது, செங்கோட்டையன் அதனை தவிர்த்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், ''புஸ்ஸி ஆனந்த் என்னை சந்தித்த போது, இருவரும் இரு கண்களாக பயணம் செய்வோம் என்று சொன்னார். இதை சொல்வதற்கு காரணம், எதிர்கால தமிழகத்தை ஆளப்போகின்ற விஜயை நான் சந்திக்கும் போது வியந்து போனேன். மனிதநேயம் மிக்க மனிதராக என்னை அவர் அரவணைத்தார். என்னை சகோதரராக ஏற்றுக்கொண்ட விஜய்க்கு கோடான கோடி நன்றி.

எம்ஜிஆர் மூன்று முறை முதல்வராக இருந்தார். இதன் பின்னர் 5 முறை ஜெயலலிதா முதல்வராக இருந்தார். அப்போது, ''எது விழுந்தாலும் சறுக்காத செங்கோட்டையன்'' என்று ஜெயலலிதா பேசினார்.

எம்ஜிஆர் முதலில் ஆட்சி அமைக்கும் போது, ''100 நாள் கூட ஆட்சி இருக்காது'' என்று விமர்சித்தார்கள். ஆனால் அவர் நிரந்தர முதல்வராக இருந்தார். அதே போல ஜெயலலிதாவும் இருந்தார். அந்த வரிசையில் விஜய் இடம் பெறுவார். எனது 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற வகையில் பணியாற்றினேன். இந்த முறை 234 தொகுதியில் நாம் வெற்றி பெறும் வகையில் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். நிச்சயமாக வெற்றியை விஜயிடம் ஒப்படைப்போம்'' என பேசினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், ''விஜய் வரும் 18-ம் தேதி ஈரோடு வர இருக்கிறார். ஈரோடு வந்தால் மட்டும் தனி சந்தோஷம். ஏனென்றால், விஜயின் ரசிகர் மன்றம் ஈரோட்டில் தான் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டது. அதே போல கொள்கை தலைவர் பெரியார் பிறந்த மண்ணும் கூட. இரு பெரிய தலைவர்களுடன் பயணித்துள்ள செங்கோட்டையன் இப்போது தவெக வந்து இருப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது. அவர் சொல்வதுபடி செய்வோம்.

செங்கோட்டையனுக்கு மரியாதை கொடுப்பது போல, மற்றவர்களுக்கும் அதே மரியாதையை கொடுப்போம். கொங்கு மண்டலத்தில் 60 தொகுதிகள் வரை வெற்றி பெற்று தருவது உங்களுடைய (செங்கோட்டையன்) பொறுப்பு. இரண்டு வருடங்களுக்கு முன்பு, தவெக கட்சியை தொடங்கிய போது ரூட் போட்டுக் கொடுக்க ஒருவர் தேவைப்பட்டது. அதில் செங்கோட்டையன் வித்தகர் என்பது அப்போது கேள்விப்பட்டேன். அதனால், எனக்கு தெரிந்த நண்பர் மூலமாக செங்கோட்டையனின் செல்போன் எண்ணை வாங்கவா? என தலைவர் விஜயிடம் கேட்டேன். தற்போது கட்சியில் இணைந்துள்ள அவர், ஈரோட்டில் 18-ம் தேதி நடக்கவுள்ள பிரச்சார இடத்தினை வீடு கட்டுவதை போல பார்த்து பார்த்து தயார் செய்து வருகிறார்.

பிரச்சார இடத்திற்கு குழந்தைகள், கர்ப்பிணிகள் வர வேண்டாம். எல்லா அரசியல் கட்சிகளும் கூட்டத்திற்கு வாங்க, வாங்க என்று சொல்வார்கள். நமது கட்சி மட்டும் தான் வர வேண்டாம் என்று சொல்லும் கட்சியாக உள்ளது. காவல் துறை எத்தனை கண்டிஷன் போட்டாலும், தலைவரை வர வைப்பேன் என்று பணிகள் செய்து வரும் செங்கோட்டையனுக்கு நன்றி. என்னாடா.. செங்கோட்டையன் பற்றி தொடர்ந்து பேசுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். ஏன் என்றால், தலைவர் விஜய் செங்கோட்டையனுக்கு சின்ன குறைக் கூட இருக்கக் கூடாது என்று சொல்லி இருக்கிறார்'' என்றார்.

இதனைத் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற 1000-க்கும் மேற்பட்ட கட்சியினருக்கு அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது.