ETV Bharat / state

திடீர் சாம்பார், திடீர் இட்லியை போல கட்சியை தொடங்குகிறார்கள்: சசிகலாவை விமர்சித்த டிடிவி தினகரன்

"ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம் என்று சொன்னவர்களின் சாயம் தற்போது வெளுத்துவிட்டது" என டிடிவி தினகரன் கூறினார்.

டிடிவி தினகரன் (கோப்புப்படம்)
டிடிவி தினகரன் (கோப்புப்படம்) (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 25, 2026 at 9:27 AM IST

1 Min Read
Choose ETV Bharat

திருநெல்வேலி: திடீர் சாம்பார், திடீர் இட்லியை போல சிலர் இப்போது கட்சியை தொடங்கி வருகிறார்கள் என்று சசிகலாவை டிடிவி தினகரன் விமர்சித்தார்.

பசும்பொன்னுக்கு நேற்று சென்றிருந்த சசிகலா, புதிய கட்சியை தொடங்குவதாக அதிரடியாக அறிவித்தார். ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய சசிகலா, விரைவில் கட்சி பெயரை அறிவிப்பதாக தெரிவித்தார்.

கடந்த பல ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த சசிகலா, தற்போது புதிய கட்சியை தொடங்கியிருப்பது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அதிலும், சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், சசிகலா கட்சி தொடங்கியிருப்பது அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. புதிய கட்சியை தொடங்கி, சட்டமன்றத் தேர்தலை சசிகலா சந்தித்தால், அது அமமுகவுக்கும், அதிமுக கூட்டணிக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: சிறையில் இருந்து வந்த பிறகும் எனக்கு பல கெடுபிடிகள் விதிக்கப்பட்டன: உணர்ச்சி பொங்க பேசிய சசிகலா

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரிக்கு வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சசிகலா புதிய கட்சி குறித்து நிருபர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் 99.9% பேர், அமமுகவிலும், அதிமுகவிலும் உள்ளனர். ஓரணியில் நாங்கள் இருக்கிறோம். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது.

ஆனால், சிலர் திடீர் இட்லி, திடீர் சாம்பாரை போல அரசியல் கட்சி தொடங்குகிறார்கள். அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவோம் என்று சொன்னவர்களின் சாயம் இப்போது வெளுத்துவிட்டது. 35 ஆண்டு காலம் எனக்கு மட்டுமே தெரிந்த சில நபர்களின் உண்மை நிலை, இன்று தமிழக மக்களுக்கும் தெரிந்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த முறை ஜெயலலிதா ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது.

நெல்மணிகள் நிறைந்த தோட்டத்தில் ஒரு சில மணிகளை வேண்டுமானால் காக்காய், குருவிகள் கொத்திச் செல்லலாம். அதனால் தோட்டத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. ஜெயலலிதா ஆட்சியை தடுத்து நிறுத்த நினைக்கும் நபர்களை, நீங்கள் நெல்மணிகளாக நினைக்கலாம். ஆனால், அவை பதறுகளாக கூட இருக்கலாம்" என டிடிவி தினகரன் கூறினார்.