திருச்சி செவிலியர் மாணவி இறப்பிற்கு தரமற்ற மருந்தே காரணம் - மருத்துவர்கள் குழு ஆய்வில் தகவல்
மேலும் அந்த மருந்திற்கான (Inj dexamethasone) பேட்ச் மருந்து சோதனைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவமனையில் யாரும் இந்த மருந்தை பயன்படுத்த வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Published : June 3, 2026 at 4:50 PM IST
சென்னை: திருச்சியில் செவிலியர் மாணவி அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்ததற்கு தரமற்ற மருந்தே காரணம் என்று மருத்துவர்கள் குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த மருந்தை, அரசு மருத்துவமனைகளில் யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
திருச்சியில் உள்ள அரசு செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த சீதாலட்சுமி என்ற மாணவி, திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவமனையில் மூக்கு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி மூக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அந்த மாணவி உயிரிழந்தார்.
| இதையும் படிங்க.. முதலமைச்சரின் திருச்சி பேச்சு ஏமாற்றம் தருகிறது; போக்கை மாற்றுங்கள்: கி. வீரமணி தாக்கு |
இதையடுத்து மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் தவறான சிகிச்சையால் மாணவி சீதாலட்சுமி உயிரிழந்ததாகக் கூறி சக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அறுவை சிகிச்சையின் போது அதிக அளவிலான மயக்க மருந்து கொடுக்கப்பட்டதே மாணவியின் உயிரிழப்புக்குக் காரணம் என்று சக மாணவிகளும், உறவினர்களும் குற்றம் சாட்டினர்.
மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து மருத்துவமனை முன்பாக சக மாணவிகளும் குடும்பத்தினருடன் சாலை மறியல் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, அமைச்சர் ரமேஷ் உள்ளிட்டோர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினார்.
இதற்கிடையே, மாணவியின் மரணம் குறித்து ஆய்வு செய்ய சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் காது மூக்கு தொண்டை மருத்துவர் பாரதி மோகன், மயக்கவியல் மருத்துவர் சண்முகசுந்தரம் , மருத்துவத்துவத் துறை பேராசிரியர் ஜெயபிரகாஷ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அந்தக் குழுவினர் ஆய்வு செய்து, அறிக்கை அளித்துள்ளனர்.
அந்த ஆய்வறிக்கையில், திருச்சி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது மாணவி சீதாலட்சுமிக்கு தரப்பட்ட டெக்சாம்மெதாசோன் (Inj dexamethasone) என்ற தரமற்ற மருந்தே அவருடைய உயிரிழப்புக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அந்த மருந்தை, அரசு மருத்துவமனைகளில் யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்ட டெக்சாம்மெதாசோன் மருந்தின் குறிப்பிட்ட பேட்ச் தயாரிப்புகள் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

