ETV Bharat / state

ஒரே ஒரு சாலைக்காக நீண்டகாலமாக போராடி வரும் பழங்குடி மக்கள்!

குறவன் குழி கிராமத்தில் பழங்குடி மக்கள் யாரும் வசிக்கவில்லை என்றும், வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் கான்கிரீட் சாலை அமைக்க அனுமதி மறுத்தும் மாவட்ட வன அலுவலர் அறிக்கை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

சாலை வசதி கேட்டு வனத்துறை அலுவலகத்தில் குவிந்த பழங்குடியின மக்கள்
சாலை வசதி கேட்டு வனத்துறை அலுவலகத்தில் குவிந்த பழங்குடியின மக்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 28, 2026 at 12:14 PM IST

2 Min Read
Choose ETV Bharat

தேனி: சாலை வசதி அமைத்து தரக் கோரி, 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் மக்கள் மாவட்ட வனத்துறை அலுவலரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில், போடிநாயக்கனூர் தாலுகாவிற்குட்பட்ட அகமலை, ஊரடி, கரும்பாறை, குறவன் குழி உள்ளிட்ட மலை கிராமங்களில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முறையான சாலை வசதி இல்லை. இதனால் அத்தியாவசிய தேவைக்கும், விவசாய பொருட்களை எடுத்துச் செல்லவும் கரடு முரடான பாதைகளில் பயணித்து மிகவும் சிரமப்படும் சூழல் உள்ளது. சில சமயங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்களை பெரியகுளம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால், டோலி கட்டி 5 கிலோமீட்டர் தூரம் வரை தூக்கிச் செல்லும் அவலம் நிலவுகிறது.

இதுபோன்ற சூழலில், மலைவாழ் மக்கள் கோரிக்கையை ஏற்ற அரசு, கடந்த 2021 ஆம் ஆண்டு வன உரிமை சட்டத்தின்படி, சோத்துப்பாறை முதல் கரும்பாறை வரை 4 கிலோமீட்டர் தூரத்திற்கு கான்கிரீட் சாலை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை சாலை வசதி அமைக்கவில்லை. ஏனென்றால், சாலை வசதி இல்லாததால் குறவன் குழி கிராமத்தில் பழங்குடி மக்கள் யாரும் வசிக்கவில்லை என்றும், வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் கான்கிரீட் சாலை அமைக்க அனுமதி மறுத்தும் தேனி மாவட்ட வன அலுவலர் அறிக்கை ஒன்றை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பழங்குடியின மக்கள் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

ஆனால், நாங்கள் எங்கள் கிராமத்தில் தான் வசிக்கிறோம் எனவும், பழங்குடியின மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு அளித்த உத்தரவின் அடிப்படையில் கான்கிரீட் சாலை அமைத்துத் தர வேண்டும் என சுமார் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் மாவட்ட வன அலுவலர் சந்தித்து மனு அளித்தனர்.

இதையும் படிங்க: சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அரசுப் பள்ளி - அதிகாரி அளித்த விளக்கம் என்ன?

இதுகுறித்து குறவன் குழி கிராம தலைவர் சங்கிலி கூறியதாவது, “குறவன் குழி உள்ளிட்ட மலைக் கிராமங்கள் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். சாலை அமைத்து கொடுத்தால் தான் விவசாயம் செய்து எங்களது வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும். 4 கி.மீ சாலை அமைக்க ரூ.1.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், வனத்துறை அதிகாரி ரோடு போடக்கூடாது என தடுக்கிறார்.

அதேபோல, அரசாங்கம் இலவசமாகக் கொடுக்கும் ரேசன் அரிசிக்கு, ஒரு கிலோவிற்கு 10 ரூபாய் வரை கொடுத்து கிராமத்திற்கு கொண்டு செல்கிறோம். உடம்பு சரியில்லனா கூட தொட்டி கட்டி தான் தூக்கிட்டு வரவேண்டும். ஆகையால், எங்களுக்கு சாலை அமைத்து தர வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.